சென்னை: விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த குஷி திரைப்படம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை சிவா நிர்வானா இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மகாநதி படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
குஷி திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூலைப் பெற்றது. ஆனால், வெளிநாடுகளில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை இப்படம் பெற்றது. குஷி படத்தின் வெற்றி விழாவில் இப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 100 குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பணம் தரப்போவதாக விஜய் தேவரகொண்டா கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் கூறியதுபோல 100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் அள்பளிப்பாக கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் ” #spreadingkushi done நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணர்கிறேன். நீங்களும் அவ்வாறு இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த முறை நான் பரிசளிக்க முடியாதவர்களுக்கு கண்டிப்பாக அடுத்த முறை பரிசளிப்பேன். ஒவ்வொரு வருடமும் நான் இவ்வாறு பரிசளிப்பேன். உங்கள் விஜய் தேவரகொண்டா” என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் 100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். முன்னதாக, குஷி படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தனது குடும்பத்தினருடன் தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோயிலுக்குச் சென்றார். விஜய் தேவரகொண்டா தற்போது கௌதம் தின்னவ்ரி இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!