நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைப் படைத்துள்ளது. இதனையடுத்து, அப்படத்தின் வெற்றி விழா இன்று(ஜூன் 17) நடந்தேறியது.
அதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ”ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று ஒற்றை ஆளாக சொல்லி விட முடியாது. எனக்கு நடிப்பெல்லாம் ஆசை இல்லை. அதை கிளப்பிவிட்டவர் பாலச்சந்தர் தான்.
எனக்கு என் திறமையைத் தாண்டியும் தமிழக மக்கள் பெரும் வெற்றியைத் தந்திருக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகள் காலத்தில் எந்த பிரச்னையுமின்றி என் படம் வெளிவருவதற்கு மகேந்திரன், தம்பி உதயநிதி அவர்கள் கூட இருந்தது முக்கியக் காரணம்.
நான் டிவி நிகழ்ச்சி செய்தபோது என்னை நிறையபேர் கிண்டல் செய்தார்கள். ஆனால் அதன் பலன், நான் பல வீடுகளுக்குச் சென்றடைந்தேன். இந்த வெற்றி சுலபமாக வந்ததல்ல. ஆகையால், இதை நான் சுலபமாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. மக்கள் இல்லையென்றால் இது நடந்திருக்காது. வெளிமாநிலப் படங்களும் ஜெய்க்க வேண்டும். நம் படமும் ஜெயிக்க வேண்டும்.
லோகேஷ் சீடன் என்பதைத் தாண்டி வாத்தியாராகவும் மாறவேண்டும். கற்றுக்கொடுக்கும்போது தான் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். லோகேஷின் அடுத்த படத்தையும் என் படமாகத் தான் நான் பார்க்கிறேன். எத்தனை வேலைகள் இருந்தாலும், தொடர்ந்து பட விநியோகிம் செய்ய வேண்டும் என ரெட் ஜெயண்ட்ஸ் இடம் கேட்டுக்கொள்கிறேன்.
தம்பி உதயநிதியின் நேர்மை மிகப் பாராட்டுக்குரியது. அதை நான் அவரின் தந்தையிடமே கூறினேன். எங்களுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் சொன்ன ஊடகங்களுக்கு நன்றி. கல்லாப் பெட்டியைப் பார்த்துக் கொண்டே நாம் தரமான படம் எடுக்க முடியாது. நாம் ரசிகனோடு ரசிகனாக மாற வேண்டும்” எனப் பேசினார்.