சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் வெளியாகி மிகப் பெரிய வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன், வசந்த் ரவி, மிர்ணா, சுனில், ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படத்தில் நடித்த வசந்த் ரவி பேசும் போது, ”ரொம்ப சந்தோஷமான தருணம் இது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், நெல்சனுக்கும் நன்றி. இந்த கதாபாத்திரம் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று இயக்குனர் சொன்னது நடந்துள்ளது. அனிருத் இசையில் ரஜினியுடன் எனக்கும் பாடல் இருந்தது மறக்க முடியாதது. ரஜினியை எப்படி பார்க்க ரசிகர்கள் விரும்பினார்களோ அப்படியே ஒளிப்பதிவாளர் காட்டியுள்ளார்.
இது எனது கேரியரில் மிகப் பெரிய எல்லை. ரஜினி எனது திரை வாழ்வில் மிகப் பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடன் பழகிய ஒவ்வொரு நாளும் என்னால் மறக்க முடியாது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். உங்களுடன் இணைந்து மறுபடியும் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். அவரும் இது தான் சொன்னார். அவரை நான் அப்பாவாக பார்க்கிறேன்” என்றார்.
நடிகர் சுனில் பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த ரஜினி, நெல்சன், சன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நன்றி. தியேட்டரில் வந்து படம் பார்த்த அனைவருக்கும் நன்றி. எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இது நன்றி” என கூறினார்.
நெல்சன் பேசும் போது ”இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தொடங்கும் போது நல்லபடியாக கொடுத்து விட வேண்டும் என்று எண்ணம் இருந்தது. ரஜினி ரசிகர்களுக்கு நன்றி. ரஜினியின் ஆரா தான் இப்படத்துக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தந்துள்ளது. காவாலா பாடல் தான் படத்திற்கு ஓபனிங் புரொமோஷனாக இருந்தது.
இப்படம் இவ்வளவு பெரிய படமாக வந்ததற்கு சன் பிக்சர்ஸ் தான் காரணம். இப்படத்தை பற்றி எல்லா மாநிலங்களிலும் பேசப்பட காரணம் ரஜினிகாந்த் தான். அவருக்கு இந்த கதை மீது இருந்த நம்பிக்கை தான். நான் நினைத்ததை விட இப்படம் 10 மடங்கு அதிகமாக வந்துள்ளது என்று படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்னார்.
அப்பவே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எங்கள் குழுவுடன் உடன் கலந்து கொண்டு அவர் பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இமயமலையில் இருந்து வந்ததும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளேன். அவரது கண்களை அடிக்கடி பயன்படுத்த முடிவு செய்த ஐடியா அவரது கண்களில் உள்ள உயிர்ப்பு தான்” என்று தெரிவித்தார்.
ரெடின் கிங்ஸ்லி பேசும் போது, ”நெல்சன் எப்படியாவது ரூ.1000 கோடி வசூலித்து கொடுத்து விடுவதானே என்று நகைச்சுவையாக பேசினார். ரஜினிகாந்த் சீக்கிரம் வாங்க உங்களை கொண்டாட மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்” என்று பேசினார்
இதையும் படிங்க: Jailer collection: 'விக்ரம்' மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்த "ஜெயிலர்".. தலைவர் காட்டுல அடைமழை தான்!