சென்னை: கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து நெல்சன் இயக்கியுள்ள படம், ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் தமன்னா, மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் உலகம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 10) வெளியானது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினியின் ஸ்டைல் மற்றும் நெல்சனின் வழக்கமான காமெடி கலந்த ஆக்ஷன் பார்முலா இயக்கம் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ஜெயிலர் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் இமயமலை சென்றுவிட்டார். முன்பதிவிலும் சாதனை படைத்த ஜெயிலர் முதல் நாள் வசூலில் இதுவரை இல்லாத சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: jailer fdfs: ஓசூரில் "ஜெயிலர்" திரைப்படத்தின் முதல் காட்சியை மலர் தூவி கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
நேற்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்கங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஜெயிலர் ஓடியது. தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டிருந்த ரஜினி ரசிகர்கள் இப்படத்தை மிகவும் கொண்டாடினர். இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ரூ.44 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ரூ.23 கோடி, கர்நாடகாவில் ரூ.11 கோடி, கேரளாவில் ரூ.5 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.10 கோடி மற்ற மாநிலங்களில் ரூ.3 கோடி என வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இதுவே மிகப் பெரிய வசூலாகும். இதற்கு முன் அஜித் நடித்த துணிவு திரைப்படம் முதல் நாளில் ரூ.20 கோடி வரை வசூலித்திருந்தது. ஆனாலும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நள்ளிரவு 12 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. ஆனால், ஜெயிலர் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்கியது. அப்படி இருக்கையில் இந்த அளவு வசூலித்து சாதனை படைத்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் அமைந்துள்ளது. இதன் மூலம் தான் எப்போதும் வசூலில் நம்பர் ஒன் என்பதை ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: Jailer Review: ரசிகர்களுடன் படம் பார்த்த படக்குழுவினரின் ரியாக்ஷன்ஸ்!