ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் கடந்தாண்டு ’ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைத்துள்ளதாக பல சர்ச்சை கிளம்பியதால், சூர்யா வீட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ருத்ர வன்னியர் சேனா இயக்கத்தின் தலைவரான வேளச்சேரியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், ஆன்லைன் மூலமாக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பினார்.
அந்தப் புகாரில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ’ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையிலும், வன்னியர் இன முன்னாள் தலைவர் குருவை கொச்சைப்படுத்தும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தோஷ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் ’ஜெய் பீம்’ படத்தில் நடித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது மத நம்பிக்கையை இழிவுபடுத்துதல் என்ற சட்டப்பிரிவின்கீழ் வேளச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பீஸ்ட்'-ஐ விமர்சித்த ரியல் பைலட்!