மும்பை: நடிகை இலியானா தனது தனிப்பட்ட வாழ்கை மற்றும் பல விஷயங்கள் குறித்து சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் என்றுமே ஆக்டிவாக உள்ள அவர், தனது ரசிகர்களிடம் "என்னிடம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் பதிலளிக்கிறேன்" (Ask me anything) என்ற தலைப்பில் இன்ஸ்டா லைவ் வந்துள்ளார்.
அவரிடம் ரசிகர்கள் பலர் தங்கள் கேள்விகளை ஆர்வமுடன் முன் வைத்துள்ளனர். அதில், ரசிகர் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் நீங்கள் உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை முதன் முதலாக கேட்டபோது என்ன உணர்ந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு, நடிகை இலியான நெகிழ்ச்சியுடன், ‘நான் அனுபவித்த மிக அழகான தருணங்களில் அது மிக முக்கியமான ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்ணீரும், மகிழ்ச்சியும் ஒன்று சேர நான் ஒரு புதுவித நிம்மதி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ‘சிறிய விதையாக என் குழந்தை உள்ளே வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதன் மீது நான் அதீத காதல் கொண்டுள்ளேன்’ எனவும் கூறியுள்ளார்". தொடர்ந்து மற்றொரு ரசிகர், உங்களின் கர்ப்ப கால பயணம் எப்படி உள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள இலியானா, தனது கர்ப்ப கால பயணத்தை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாது எனவும், அது அழகிய நீண்ட நெடிய பயணம் எனவும் கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர் ஐஸ்கிரீம் அல்லது பீட்சா இதில் உங்களுக்கு பிடித்த உணவு எது என கேட்டார். அதற்கு பதில் அளித்துள்ள இலியானா, இந்திய உணவை நான் அதிகமாக மிஸ் செய்கிறேன் எனவும், பட்டர் சிக்கன் மற்றும் நாண் என்ற காம்பினேஷனை சாப்பிட்டு நாள் ஆகிவிட்டது எனவும் கூறியுள்ளார்.
இப்படி ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்து வரும் இலியானா, தனது கர்ப்பகால புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஆனால் தற்போது வரை தனது கணவரின் புகைப்படத்தையோ அல்லது அது குறித்தான தகவலை வெளியிடாத இலியானா, தனது காதல் வாழ்கை குறித்து சில கருத்துக்களை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், "என்னிடம் நானே கனிவாக நடக்க மறக்கும்போது, இந்த அன்பான மனிதர்தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் மனதளவில் உடைந்துபோகும் தருணங்களில் எல்லாம் அவர் என்னை தாங்கிப் பிடித்தார். என்னுடைய கண்ணீரைத் துடைக்கிறார். என்னை சிரிக்க வைக்க காமெடிகளை சொல்கிறார்.
எனக்கு அந்த தருணத்தில் என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு என்னை அணைத்துக் கொள்கிறார். அவர் என் வாழ்கையில் வந்த பிறகு எல்லா விஷயங்களும் இனி கடினமானவையாக இருக்காது என எனக்கு தோன்றுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?