நடிகர் மாதவன் இயக்குநராக உருவாக்கியுள்ள படம் 'ராக்கெட்ரி'. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை மாதவன் இயக்கியதோடு அல்லாமல் நம்பி நாராயணனின் வேடத்திலும் நடித்து உள்ளார். ஜூலை 1ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் நடிகர் சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று நடிகர் மாதவனும் சூர்யாவும் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினர். அப்போது இருவரது சினிமா வாழ்க்கை, குடும்பம், ராக்கெட்ரி படம் என மனம்விட்டுப்பேசினர். அப்போது கஜினி படம் முதலில் தனக்குத்தான் வந்ததாகவும்; ஆனால் கதை பிடிக்கவில்லை என்று முருகதாஸிடம் கூறி மறுத்துவிட்டதாகவும் மாதவன் கூறினார்.
ஆனால், அதில் சூர்யாவின் ஈடுபாட்டைப் பார்த்து இனிவரும் காலங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டதாகவும் மாதவன் கூறினார்.
சூர்யா பேசும்போது, ' 'ஒரு படம் நடித்தோம்; போனோம்' என்று இல்லாமல் நீண்ட நாட்கள் பேசப்படும் படங்களாக நடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்காததை ராக்கெட்ரி படம் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்' என்றார். 'ஜெய்பீம்' படம் மூலம் ஆஸ்கர் வரை சென்ற சூர்யா ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமைப்படுத்திவிட்டதாக மாதவன் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: Video: 'நேருக்கு நேர்' முதல் 'நம்பி நாரயணன்' வரை...! : சூர்யா - மாதவன் உரையாடல்