தமிழ் சினிமாவில் இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் 'மோனிஷா என்கிற மோனாலிசா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை மும்தாஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டப் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் சென்னை அண்ணா நகர் பிரதான சாலையில் உள்ள ஹெச் பிளாக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
மும்தாஜ் வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சில ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நீண்ட நாட்களாக வடமாநில சிறுமிகளும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இருவரையும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் வீட்டைவிட்டு வெளியேறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தாங்கள் வீட்டு வேலை செய்யுமிடத்தில் சொந்த ஊருக்குச்செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அண்ணாநகர் காவல் துறையினர் 2 வடமாநில சிறுமிகளையும் மீட்டு விசாரணை செய்தனர்.
அவர்கள், “நாங்கள் இருவரும் நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்துவந்தோம். தற்போது அங்கு வேலை செய்ய எங்களுக்குப் பிடிக்கவில்லை. எங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தோம். ஆனால், எங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காமல் எங்களை அங்கேயே வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்” என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, 2 வடமாநில சிறுமிகளையும் காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர். அவரின் பெற்றோர்கள் வந்தவுடன் அவரிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறுமிகளுக்கு வேறு ஏதாவது தொல்லைகள் கொடுக்கப்பட்டதா.. என்பது குறித்து குழந்தைகள் நல வாரிய அலுவலர்கள் விசாரணை நடத்த உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மரண மாஸ் லுக்கில் கமல்! - இன்று வெளியாகிறது விக்ரம் படத்தின் முதல் பாடல்