சென்னை: சினிமா என்பது ஒரு ஆயுதம். கத்தி இன்றி ரத்தம் இன்றி போர் செய்யும் போர்க்களமே சினிமா. என்ன தான் பொழுதுபோக்கு மற்றும் வியாபார அம்சங்கள் பிரதானமாக இருந்தாலும், இதன் மூலம் சமூகத்து அவலங்களை தோலுரித்து காட்டும் படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில், சமகால தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் என்றால் அது பா.ரஞ்சித் ஒருவரும்கூட. திரைத்துறை மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர், பா.ரஞ்சித். 2012இல் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் சென்னை 600028, சரோஜா ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
கலகலப்பான பொழுதுபோக்கு படங்களை இயக்கக்கூடிய இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இருந்து, இப்படி ஒரு சமூகப் படங்களை இயக்கும் இயக்குநரை யாரும் எதிர்பார்க்கவில்லை. அட்டகத்தி சாதாரண காதல் கதையாக தெரியலாம். ஆனால் அப்படம் பேசிய அரசியல் மிக முக்கியமானது. ஏனென்றால், அட்டக்கத்தி படம் அவர்களது வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது. அவர்களின் சுக, துக்கங்கள் திரையில் விரியும்போது பார்வையாளருக்கு புதிதாக இருந்தது. இப்படி தனது முதல் படத்திலேயே பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார்.
தான் சந்தித்த பிரச்னைகளையும், தனது அரசியல் பார்வையையும் சினிமா என்ற வெகுஜன ஊடகம் மூலம் ரசிகர்களுக்கு கடத்துவதற்கு அட்டகத்தி படத்தை ஒரு அடையாளமாக மாற்றிக் கொண்டார். அதன்பிறகு, அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டது. அட்டகத்தி படத்திற்கும், இந்த படத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள்.
ஒரு சாதாரண சுவரை வைத்து அவர் பேசிய அரசியல் மிகப்பெரியது. அரசியல்வாதிகளின் அரசியல் லாபத்திற்கு எவ்வாறு இளைஞர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர் என்பதை அசலாக பதிவு செய்திருந்தார். சுவரில் விளம்பரம் செய்வதில் இரண்டு கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதலை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் கொடுத்து வியக்க வைத்தார். இப்போது வரை மெட்ராஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.
மெட்ராஸ் படத்தை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு, ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியை வைத்து தனது அரசியல் பார்வையை இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து எடுத்த படம்தான் கபாலி. ஒரு உச்ச நட்சத்திரத்தை இதுபோன்ற படங்களில் நடிக்க வைக்க தனி தைரியம் வேண்டும். அதனைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். மும்பையில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் மக்களை பற்றிய படமாக அது இருந்தது.
அதன் பிறகு, சென்னையில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து அவர் இயக்கிய படம், சார்பட்டா பரம்பரை. அதிலும் தனது அரசியலை லாவகமாக பேசியிருந்தார். தற்போது விக்ரமை கதாநாயகனாக வைத்து கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துன்பங்களைப் பற்றி ’தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை பதிவு செய்து வருகிறார். இவரது வழியில் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை தமிழ் சினிமாவில் பதிவு செய்கின்றனர். பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், சேத்து மான், குதிரை வால், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இன்று தனது 41வது பிறந்தநாள் கொண்டாடும் பா.ரஞ்சித்துக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: 'கூச முனிசாமி வீரப்பன்' ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டு தேதி மாற்றம்!