சென்னை: ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தை உலகெங்கும் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டும் இன்றி, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஜெயிலர் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு திரையரங்கமும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
திரையரங்கிற்கு வெளியே ரசிகர்கள் ரஜினியின் கட் அவுட் வைத்து அதற்கு முன்பு நின்று ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். "வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்ன விட்டு எங்கும் போகல" என்ற படையப்பா படத்தின் மிகப் பிரபலமான டயலாக் இன்றும் நடிகர் ரஜினிக்கு மட்டும்தான் கச்சிதமாகப் பொருந்தும் என்ற வகையில் ஜெயிலர் படம் இருப்பதாகவும், அவர் நடை, உடை, பாவனை என ரசிகர்கள் இஞ்ச் இஞ்சாக ரசித்துப் படத்தை வசூல் ரீதியாக இமயமலை எட்டச் செய்து வருகின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் ஜெயிலர் முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் வெளியானது. ஆனால் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கேரளம் மாநிலத்தின் பல திரையரங்குகள் என அனைத்து இடங்களிலும் ஜெயிலர் காலை 6 மணிக்கே வெளியாகி ரசிகர்களுக்கு திவ்ய தரிசனம் வழங்கியுள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் கூடியுள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் உலகமே ரஜினியின் ஜெயிலர் படத்தைக் கொண்டாடி வரும் நிலையில் அவர், ரசிகர்களுக்கான தரிசனத்தைத் திரையரங்கில் வழங்கி விட்டு தெய்வீக தரிசனத்தைத் தேடி நேற்று இமயமலைக்குச் சென்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். சன பிக்சர்ஸ் தயாரித்து, அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த படங்களின் தோல்வியால் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே இந்த படம் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இப்படம் இருவருக்கும் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை முன்வைத்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில் ஜெயிலர் திரைப்படம் முன்பதிவில் சாதனை படைத்துள்ள நிலையில், 34 வெளிநாடுகளில் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மற்றும் 2800க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் நீளம் 168 நிமிடங்களாக உள்ள நிலையில் படக்காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பெங்களூரில் உள்ள லட்சுமி திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய நிலையில் ஹைதராபாத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நெல்சனின் டிரேட்மார்க் காமெடி மற்றும் ரஜினிகாந்த்தின் திரை ஆளுமை சிறப்பாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் தொடங்கி இந்தவாரம் முழுக்க ஜெயிலர் திரைப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘அஜித் ரசிகரா இருந்தாலும் ரஜினிதான் எனக்கு’.. போஸ்டரில் முத்தமிட்ட ரசிகர்!