சென்னை: புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) நேற்று காலை நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ஆயிரம்விளக்கு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அவரது உடலை உடற்கூராய்விற்காக ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உடற்கூராய்விற்குப் பின் இன்று வாணி ஜெயராம் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலை அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதை உடன் வாணி ஜெயராமின் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் தடயவியல்துறை அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை ஆய்வு அடிப்படையில், வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாணி ஜெயராம் நம்மை விட்டுப் பிரிந்தது மீளாத்துயரம் - நடிகை ரம்யா நம்பீசன்