சென்னை: அஜித் குமார், இந்த ஒரு பெயர் தமிழ் சினிமாவின் அடையாளமாக தற்போது பார்க்கப்படுகிறது. ஒரு சாதாரண பைக் மெக்கானிக்காக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அஜித், இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். காரணம் அவரது உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் சேர்ந்த தன்னம்பிக்கை. தமிழில் முதல்முறையாக அமராவதி படத்தில் நாயகனாக நடித்த அஜித் அதன் பிறகு ஆசை படத்தில் ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். தொடர்ச்சியாகக் காதல் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆதர்ச நாயகனாக இடம் பிடித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்திலிருந்து அதிரடி நாயகனாகத் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கினார். இடையில் கார் பந்தயத்தில் கவனம் செலுத்திய அஜித், சில படங்களில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் மீண்டும் நடிப்பின் மீது ஆர்வம் செலுத்தி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தனது சினிமா வாழ்க்கையில் அஜித் கைவிடப்பட்ட அவர் நடித்து பாதியில் நின்றுபோன படங்களின் பட்டியல் இது.
1997 ஆம் ஆண்டு விஜய், சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் சூர்யா ரோலில் முதலில் ஒப்பந்தமாகி நடித்தவர் அஜித்தான். 1995-ல் வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தைத் தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் இணைந்த இரண்டாவது படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படத்திலிருந்து அஜித் விலகிவிட்டார். தற்போதும் இருவரும் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் காணலாம். இதே ஆண்டில் சாருமதி என்ற படத்தில் அஜித் நடித்தார். பின்னர் அப்படம் காரணம் தெரியாமலேயே பாதியில் கைவிடப்பட்டது.
1999-ல் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அடுத்ததாகப் பாலா இயக்கிய நந்தா படத்தில் அஜித் நடிப்பதாகக் கூறி அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்தப்படத்திலிருந்து அஜித் விலகிவிட, சூர்யா அதில் நடித்து அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது.
அதே போல் பாலா இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'நான் கடவுள்' படத்திலும் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆனால் அதில் பாலாவுக்கும் அஜித்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அஜித் அந்தப்படத்திலிருந்து விலக, அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்தார். ஆர்யாவுக்கு நல்லதொரு திருப்புமுனை படமாக நான் கடவுள் அமைந்தது.
2000ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா இருவரது நடிப்பில் நியூ படம் உருவாக இருப்பதாகவும், அந்தப்படத்தை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப்படத்திலிருந்து நடிகர் அஜித் திடீரென்று விலக, எஸ்.ஜே.சூர்யா - சிம்ரன் நடிப்பில் 2004-ல் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இதன் போஸ்டர் கூட வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அஜித்தான் எஸ்.ஜே.சூர்யாவிடம் இப்படத்தில் நீங்களே நடிக்கலாமே என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.
சிட்டிசன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சரவண சுப்பையா இயக்கத்தில் மீண்டும் அஜித் இணைந்து நடிக்க இருந்த படம் இதிகாசம். வரலாற்றுப் பின்னணியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விட்டதோடு சரி, அந்தப்படம் அப்படியே கைவிடப்பட்டது.
பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் 4 வேடங்களில் காங்கேயன் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது. அதில் அஜித்தின் கெட்டப் மிரட்டலாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது. படம் வந்திருந்தால் நிச்சயம் அஜித்துக்கு மிகப் பெரிய திருப்புமுனை படமாக இருந்திருக்கும்.
அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் சரண். ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ படங்களைத் தொடர்ந்து அஜித்தும் சரணும் மூன்றாவது முறையாக ஏறுமுகம் என்ற படத்தில் இணைவதாகக் கூறி அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு தொடங்கிக் கிட்டத்தட்ட 40 சதவீத படம் நிறைவடைந்த நிலையில், கதையில் திருப்தி இல்லை என்று சொல்லி அஜித் அதிலிருந்து விலகியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அந்தப்படம் விக்ரம் நடிப்பில் ‘ஜெமினி’ என்ற பெயரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது தனிக்கதை. அதில் வரும் "ஓ போடு" பாடலை மறக்க முடியுமா என்ன.
அஜித் நடிப்பில் ‘மகா’ என்ற படம் உருவாக இருப்பதாகவும், அதில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அப்போது அஜித்திற்குக் காலில் காயம் ஏற்பட்டதால் சிறிது காலம் அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். அவர் மீண்டும் வருவதற்குக் காலதாமதமானதால் அந்தப்படமும் கைவிடப்பட்டது.
மருத்துவர் கதாபாத்திரத்தில் அஜித் திருடா என்ற படத்தில் நடித்தார். சிலநாட்கள் தான் படப்பிடிப்பு நடந்தது. இந்த படமும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதே கூட்டணியில் ‘ஜனா’ படம் உருவாகியது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் மிரட்டல். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்திற்காக அஜித் மொட்டை அடிக்க வேண்டும் என்று இருந்தது. இதனையடுத்து அஜித் அந்தப்படத்திலிருந்து விலகினார். பின்னாளில் அந்தப்படம் கஜினியாக வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது.
தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக் கடந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் துணிவு. அதனைத் தொடர்ந்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க இருந்தார். அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்குப் பிடிக்காததால் அவர் நீக்கப்பட்டார்.
தற்போது மீகாமன், தடையற தாக்க படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தை இயக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: 'வடக்கனும் சக ஏழைதான்.. யாதும் ஊரே யாவரும் கேளிர்' - வைரலாகும் விஜய் ஆண்டனி கருத்து!