சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் “பரியேறும் பெருமாள்” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது முதல் தடத்தை பதித்தார். பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி வெளிவந்த அப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதன் மூலம் மாரி செல்வராஜ் பெற்ற வெற்றி அடுத்தகட்ட நகர்வாக தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பை வழங்கியது. இப்படியாக மாரி செல்வராஜால் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்புதான் “கர்ணன்”. அப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் பட்டியலினத்வர்களின் வாழ்க்கையையும் வலியையும் காட்டமாக இவர் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ (Maamannan) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படமே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிறப்பம்சமாக, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ‘வடிவேலு’ நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். மாமன்னன் படத்தில் இருந்து சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. வடிவேலு குரலில் வெளியான 'ராசா கண்ணு' என்ற அந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வடிவேலு குரலில் வந்துள்ள பாடல் என்பது மட்டுமின்றி யுகபாரதியின் வரிகளும் அருமையாக அமைந்தது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பாடலின் காட்சி அமைப்பும் கர்ணன் படத்தை நினைவுகூருகின்றன. இக்கதையும் ஒரு உண்மை சம்பவமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாமன்னன் படத்தில் இருந்து அடுத்த பாடல் வெளியாகும் தேதி இன்று (மே 25) அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏ.ஆர்.ரகுமான் ரெக்கே' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாடல் நாளை மறுநாள் '27ஆம் தேதி' வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக மாரி செல்வராஜ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இணைந்துள்ள மாமன்னன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "பஞ்சம், பசி பார்த்த சனம்...படை இருந்தும் பயந்த சனம்" - வெளியானது மாமன்னன் முதல் பாடல்!