சென்னை: அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான "துணிவு" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கு பிடிக்கவில்லையாம். இதனால் வேறு கதையை ரெடி செய்யும்படி அஜித் கூறியுள்ளார். ஆனால், விக்னேஷ் சிவன் நேராக லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரனிடம் சென்று கதையை சொல்லியுள்ளார். அவருக்கும் அந்த கதை பிடிக்காமல் போனதால், இந்த கூட்டணியிலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தூது சென்ற நயன்தாராவின் முயற்சியும் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் சிவன் மன உளைச்சலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில வருடங்களுக்கு முன்பு விஜய்க்கு சொன்ன கதையைத்தான் அஜித்துக்கு சொல்லி மகிழ் திருமேனி ஓகே வாங்கியதாகத் தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.