சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, 16 வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களின் மூலம் கிராமத்து கதைகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். 'இயக்குநர் இமயம்' என்று போற்றப்படும் அவர், தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆக. 23ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது முதிர்வு காரணமாகவும், நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்ஜிஎம் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், தற்போது பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 'வெந்து தணிந்தது காடு' ட்ரெய்லர் ; பார்ட்-2விற்கு லீடு கொடுத்த கௌதம் மேனன்