சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 1938 ஆம் ஆண்டு ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் வஹிதா ரஹ்மான் பிறந்தார். சிறு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்த இவர், மேடைகளில் நடனம் ஆடி வந்தார். இவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை இறந்துவிட குடும்பம் சூழல் காரணமாக நடிக்க வந்துவிட்டார்.
1955ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ரோஜுலு மராயி என்ற படத்தில் நடனமாடி தனது முதல் திரைப் பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பழம்பெரும் நடிகரான என்டிஆர் உடன் ஜெயசிம்ஹா என்ற படத்தில் நடித்தார். தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படத்தில் நடனமாடியுள்ளார். ஒருநாள் ஹைதராபாத் வந்த பாலிவுட் திரைப்பட இயக்குநர் குரு தத், இவரின் நடிப்பை பார்த்து இவரை பாலிவுட்டில் சிஐடி என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாக உருவெடுத்தார். 1960, 70, 80களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த வஹிதா ரஹ்மான் பல்வேறு விருதுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி கதாநாயகியாக நடித்த தனது முதல் படத்திலேயே விலைமாது வேடத்தில் நடித்திருந்தார். குரு தத் இயக்கத்தில் வஹிதா ரஹ்மான் பியாஷா என்ற படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான திலீப் குமார், ராஜ் கபூர், ராஜேந்திர குமார், ராஜேஷ் கண்ணா ஆகியோர் உடன் இணைந்து நடித்துள்ளார். நீல் கமல் என்ற படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது பெற்றார். 1971ல் வெளியான ரேஷ்மா அர் சேரா என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் கடைசியாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தில் கமல்ஹாசனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு மத்திய அரசு 1972இல் பத்ம ஶ்ரீ விருதும், 2011இல் பத்ம பூஷண் விருதும் அளித்து சிறப்பித்தது.
இந்த நிலையில் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு இந்திய திரைத் துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்திரமுகி 2; ரஜினியிடம் ஆசி பெற்ற லாரன்ஸ்!