சென்னை: கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் "கிரிமினல்". அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு, அறிமுக இசையமைப்பாளரான 'ஆப்பிள் அண்ட் பைனாப்பிள்' இசையமைக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "ஓடிடி நிறுவனங்கள் மற்றும் ரசிகர்களும் "கிரிமினல்" போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில், "கிரிமினல்" படத்தை வாங்க பல ஓடிடி நிறுவனங்கள் முன் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த அளவுக்கு படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதை படத்தின் ட்ரெய்லர் நிரூபித்துள்ளது.
பொதுவாக ஓடிடி நிறுவனங்கள் பெரிய படங்களைத்தான் வாங்குகிறார்கள்; சிறிய படங்களை வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மையில் ஓடிடி நிறுவனங்கள் அதிகம் வாங்குவது சிறிய படங்களைத்தான். நல்ல படமாக இருந்தால் அதை வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதனால் நிறைய இளைஞர்கள் திரைத்துறைக்கு வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான மகேஷ் சி.பி பேசுகையில், "கிரிமினல் திரைப்படம் ஒரே நாளில் நடக்கும் கதை. ரசிகர்களை சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையோடு இருக்கும். நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களை நூறு விழுக்காடு திருப்திப்படுத்தும்" என்று கூறினார்.
இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில், "இது எனது முதல் படம் என்பதால், முழு உழைப்பையும் இந்தப் படத்தில் போட்டிருக்கிறேன். பல கட்டங்களில் படத்தை மெருகேற்றினோம். படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான மகேஷ், நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததோடு, படம் சிறப்பாக வருவதற்கு மிக கடுமையாக உழைத்தார், அவருக்கு நன்றி" என்று கூறினார்.
இதையும் படிங்க:Thalapathy 66: நிறைவடைந்தது 'தளபதி 66'-ன் முதல்கட்டப் படப்பிடிப்பு!