தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முக்கியமான இயக்குநராக உயர்ந்துள்ளவர், பா.இரஞ்சித். இவரது திரைப்படங்கள் அனைத்தும் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல், அவர்களது உரிமைகள் குறித்து இவரது படங்கள் பேசும். அட்டகத்தி தொடங்கி சார்பட்டா பரம்பரை வரை இவர் இப்படித்தான் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் வெளியானது. இப்படமும் அவரது பாணியிலான படம்தான்.
இதில் காதல் பற்றியும் உணவு, உடை அரசியல்கள் பற்றியும் பேசியுள்ளார். மேலும் 'நாடக காதல்' என ஒருசாரரின் காதலை மட்டும் கொச்சைப்படுத்துவது குறித்தும் படத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் படம் பல்வேறு விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்தப் படத்தில் கம்யூனிஸ்ட்கள் குறித்து ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளதாக கம்யூனிஸ்ட்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு ஆண் கதாபாத்திரம் பெண் கதாபாத்திரத்தைப் பார்த்து 'நீங்கள் கம்யூனிஸ்ட்டா' என்று கேட்கிறார்.
அதற்கு அவர், 'இல்லை. நான் அம்பேத்கரிஸ்ட்' என்று சொல்கிறார். இதில் கம்யூனிஸ்ட்டா என்று கேட்ட ஆண் கதாபாத்திரம் பிற்போக்குத்தனமான சாதி புரிதல் அற்றவராக இருப்பார். இதனால் படத்தைப் பார்த்தவர்கள் அப்போது கம்யூனிஸ்ட்கள் சாதிய புரிதல் அற்றவர்களா என்று கோபமடைந்தனர். சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்சென்னை மாவட்டத் தலைவர் லெனின் நம்மிடம் பேசும்போது ”நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் எதிரில் உள்ள பெண்ணிடம் நீங்கள் கம்யூனிஸ்ட்டா என்று ஒருவர் கேட்கிறார்.
எதன் அடிப்படையில் கேட்கிறார் என்றால், ஒரு முற்போக்கு சிந்தனை உள்ளவர்தான் இதுபோன்ற கருத்துகளைப் பேசுவார்கள்; கம்யூனிஸ்ட் தான் இது போன்று முற்போக்கு சிந்தனையுடன் பேசுவார்கள் என்ற அடிப்படையில் பா.இரஞ்சித் இப்படி காட்சி வைத்திருக்கலாம் என்பதே எனது கருத்து.
திரைப்படங்களில் பொதுவாக பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் என்று காட்டப்படுகிறது. ஆனால், அம்பேத்கரைப் பற்றி பேசும்போது மட்டும் பட்டியலின அடையாளத்துடன்தான் பார்க்கப்படுகிறது. அம்பேத்கரிஸ்ட் என்று யாருமே இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று இரஞ்சித் சொல்ல வருகிறார்.
பா.இரஞ்சித் ஒரு அம்பேத்கரிஸ்ட். எனவே, இதனை வெளிக்காட்டவே இப்படி ஒரு கதாபாத்திரத்தை படத்தில் வைத்துள்ளார். இதில் நான் முரண்படவில்லை. ஆனால், இந்த படத்தில் பா.இரஞ்சித் யாரை கம்யூனிஸ்ட் ஆக காட்டுகிறாரோ அவரை சாதிய புரிதல் அற்றவராகவும், பிற்போத்தனமான மனிதராகவும் பெண்ணியத்தை ஏற்றுக்கொள்ளாதவராகவும் காட்டியுள்ளார் இதுதான் பிரச்சினை.
அதுவும் ரொம்ப பழையவற்றை இப்போது பேசிவருகிறார். வர்க்கம் மட்டுமே பிரச்சினை என்பதல்ல கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு. இந்திய சமூகத்தில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்து இருக்கிறது என்பது தான் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு. பா.இரஞ்சித் ரெனே கதாபாத்திரத்தை அம்பேத்கரிஸ்ட்டாக காட்டுவதில் எந்தப் பிரச்சனையும் எங்களுக்கு இல்லை.
ஆனால், கம்யூனிஸ்ட் ஆக காட்டப்பட்டுள்ள கதாபாத்திரத்தைத் தான் எதிர்க்கிறோம். இப்போது தீண்டாமைக்கு எதிரான களப்போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி தான் முன்னெடுத்துச்செல்கிறது. தீண்டாமை பட்டியலினத்தவர்கள் பிரச்னையாகப் பார்க்கப்பட்டு வந்தபோது கம்யூனிஸ்ட்கள் தான் இது பட்டியலினத்தவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. இது சமூகத்தில் இருக்கிற ஏற்றத் தாழ்வுக்கான பிரச்னை என்று பொதுபிரச்னையாக சாதிகளுக்கு எதிரான போராட்டமாக கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தனர்.
கம்யூனிஸ்ட்களை எதிர்மறை கதாபாத்திரமாக காட்டியதுதான் தவறு. ரஞ்சித் கம்யூனிஸ்ட்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்று இன்னும் நிறைய படிக்க வேண்டும். பட்டியலினத்தவர்களுக்கான ஆதரவாளர்களை அணி சேர்க்கும் பணியில் பா.இரஞ்சித் ஈடுபட வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் ஆஸ்கார் பரிந்துரை 'தி லாஸ்ட் பிலிம் ஷோ' - ஒரு பார்வை