எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிகுளம் கோயிலுக்குள் நுழைய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவைராணிக்குளம் கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அமலா பால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனால் அமலா பால் நுழைவு வாயிலில் இருந்தபடியே தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். திருவைராணிகுளம் கோயில் நிர்வாகத்தின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் ஆர்.வி.பாபு, தனது பேஸ்புக் பக்கத்தில், "மத நம்பிக்கை இல்லாத இந்து ஒருவரை கோயில் நிர்வாகியாக அனுமதிப்பதும், மத நம்பிக்கையுள்ள மாற்று மதத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்காததும் எந்தமாதிரியான தர்க்கம்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல திருப்பதி போன்ற கோயில்களில் பின்பற்றப்படும் வழக்கங்களை திருவைராணிகுளம் கோயில் நிர்வாகமும் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நடிகை அமலா பால் கேரளா மாநிலத்தில் பிறந்தவர். கிறிஸ்துவ மதத்தினை சேர்ந்தவர். கொச்சினில் உள்ள கல்லூரியில் கல்லூரிப்படிப்பை முடித்தார். 2009ஆம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானர். இதையடுத்து தமிழில் மைனா என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பின் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்றார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இவர் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஷூட்டிங்'; 'அற்புத உள்ளம் கொண்டவர்' எனப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா