சென்னை ரைனோஸ் அணியினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் அணியின் வீரர்களான நடிகர் ஜீவா, விக்ராந்த், பரத், சாந்தனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் ஜீவா, “கடந்த 6 ஆண்டுகளாக பல முறை இந்த கிரிக்கெட் போட்டி பார்த்து இருப்பீர்கள். மிகவும் ஜாலியாக இருக்கும்.
மீண்டும் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்த இணைய உலகத்தில் பல நிகழ்ச்சிகள் வந்து கொண்டுள்ளது. முன்பை விட தற்போது நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இது நிறைய பேரை தூண்டும். ஆர்யா தான் இந்த அணியின் கேப்டன். அவர் டெல்லியில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. சென்னையில் இந்தப் போட்டி நடைபெறவில்லை. விரைவில் சென்னையில் நடைபெறும் என நம்புகிறோம்.
பெங்களூரு, திருவனந்தபுரம், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. எல்லா நடிகர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நாங்கள் நினைக்கிறோம். டெஸ்ட் போட்டியைப் போல இரண்டு இன்னிங்ஸ் நடைபெறும். முதல் இன்னிங்சில் பேட் செய்த முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பு வழங்கப்பட்டாது. பந்துவீச்சாளர்களுக்கும் அப்படியே” என பேசினார்.
நடிகர் விக்ராந்த், “இந்த ஆண்டு ஒரு சிலர் புதிதாக வந்துள்ளனர். நிறைய கிரிக்கெட் போட்டி முறை வந்துள்ளது. 10 ஓவர் போட்டி ஆட உள்ளோம். இது சிறப்பாக இருக்கும். இது உலகத் தரத்தில் இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால், “கடந்த முறை எங்களால் விளையாட முடியவில்லை. சில பிரச்னைகள் இருந்தது. அது எல்லாம் தற்போது முடிந்து மீண்டும் கிரிக்கெட் ஆட உள்ளோம். நான், விக்ராந்த் இருவரும் லால் சலாம் படத்திற்காக கிரிக்கெட் பயிற்சி எடுக்க இருந்தோம். அதே நேரத்தில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கிரிக்கெட் எனக்கு நிறைய நாள் சோறு போட்டுள்ளது.
இந்த முறை விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கண்டிப்பாக இந்தப் போட்டி சிறப்பாக இருக்கும். எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிகவும் நன்றி. கர்நாடக அணிக்கும் எங்களுக்குமான போட்டி தான் மிகவும் கடுமையாக இருக்கும். போட்டியைத் தாண்டி மற்ற நேரங்களில் மிகவும் ஜாலியாக இருக்கும். ஆனால் போட்டியின்போது கடுமையாக விளையாடுவோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் நடிகர் ஜீவா, “மொத்தம் 1 மாதம் போட்டி நடக்க உள்ளது. சென்னை, கர்நாடகா, மும்பை, தெலுங்கு, பஞ்சாப், போஜ்புரி, பெங்கால், கேரளா உள்ளிட்ட அணிகள் இந்தப் போட்டியில் ஆட உள்ளனர்'' என்றார். ரம்மி விளையாட்டு நிறுவனம் இந்த தொடரை வழங்குவது குறித்த கேள்விக்கு நடிகர் ஜீவா கூறும்போது, ''இது எங்களது அணியின் உரிமையாளர்களிடம் தான் கேட்ட வேண்டும். நாங்கள் வீரர்கள் மட்டுமே'' என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் கால்ஷீட் எங்களிடம் தான் உள்ளது - அர்ச்சனா கல்பாத்தி!