மும்பை: தயாரிப்பாளர்கள் வினோத் பன்சாலி மற்றும் சந்தீப் சிங் இணைந்து முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்கவிருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ‘அடல்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
இந்தப் படம் எழுத்தாளர் உல்லேக்.N.P எழுதிய ‘The untold Vajpayee: Politician and Paradox' என்ற புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் வினோத் பேசுகையில், “நான் அடல்ஜியின் மாபெரும் ரசிகன். அவர் பிறப்பிலேயே மாபெரும் தலைவர், மேலும் தொலைநோக்குப் பார்வை உடையவர். நம் நாட்டிற்கு அவர் அளித்த பங்கு அளவற்றது. இந்தப் படத்தை பனுசாலி ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பதில் பெருமைகொள்கிறோம்'' என்றார்.
மேலும், இதுகுறித்து இயக்குநர் சந்தீப் சிங் பேசுகையில், “ஒரு திரைக்கலைஞராக சினிமா என்பது சொல்லப்படாத கதைகளை சொல்ல உதவும் ஓர் கருவியாகக் கருதுகிறேன். அவரது அரசியல் சித்தாந்தங்களை மட்டுமே எடுத்துக் காட்டாமல் அவரின் கவித்துவமான பக்கங்களையும் காட்டவேண்டுமென நினைக்கிறோம்.
மேலும், அவர் எப்படி எதிர்தரப்பினராலும் ரசிக்கப்பட்டார் என்பதைப் பற்றியும் இந்தியாவின் முற்போக்கான பிரதமராக அவர் விளங்கியதையும் திரையில் காட்ட நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் வாஜ்பாய் வேடத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், மற்றும் படத்தின் இயக்குநர் குறித்த தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தப்படம் 2023 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.