ஹைதராபாத்: இயக்குநர் ஓம் ராத் இயக்கத்தில் ராமாயண இதிகாசத்தைத் தழுவி, பிரபாஸ் மற்றும் கிரிதி சனோன் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் மந்தமாக உள்ளதாக மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், பிரபாஸ் ரசிகர்கள் அவரை ராமர் அவதாரத்தில் பார்த்ததே போதும் என்ற மனநிலையுடன் படத்திற்கு வெளியாகும் விமர்சனங்களைத் தவிர்த்து வருகின்றனர். இருப்பினும் ‘ஆதி புருஷ்’ திரைப்படம் முதல் நாளில் மாபெரும் வசூலை ஈட்டியுள்ளது.
இதனிடையே T-Series நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “திரை நட்சத்திரம் பிரபாஸ் நடித்து, அகில இந்திய அளவில் இந்தியில் வெளியான படங்களில் அதிக முதல்நாள் வசூலை ஈட்டியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
பல மொழிகளில் 3D தொழில் நுட்பத்துடன் தயாரான இந்தப் படத்தில் பிரபாஸ், கிரிதி சனோன், ஷைஃப் அலி கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷன் குமார், ரவுத், பிரசாத் சுதார், மற்றும் ரெட்ரோஃபில்ஸ் (Retrophiles) நிறுவனத்தின் ராஜேஷ் நாயர், பிரமோத் மற்றும் யுவி கிரியேஸன்ஸ் (UV Creations) வம்சி ஆகியோரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் ஹிந்தியில் 38 கோடி வரையிலும், ஒட்டுமொத்த இந்தியாவில் 90 கோடி ரூபாய் வரையிலும் வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் 140 கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபாஸ் ராகவ் என்ற கதாபாத்திரத்திலும், கிரீதி சனோன் ஜானகி கதாபாத்திரத்திலும், சன்னி சிங் லக்ஷ்மண் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆதி புருஷ் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இந்திய அளவில் அதீத வசூல் ஈட்டிய இந்தி திரைப்படங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வரிசையில் ஆதிபுருஷ் திரைப்படம் 140 கோடி வசூலித்து முதல் இடத்திலும், ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் 106 கோடி வசூலித்து இரண்டாம் இடத்திலும்; ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த ‘பிரம்மாஸ்திரம்’ திரைப்படம் 75 கோடி வசூலித்து மூன்றாம் இடத்திலும், ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘வார்’ மற்றும் அமீர் கான், அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ திரைப்படம் அடுத்தடுத்த வரிசையில் இடம் பெற்றுள்ளன.
மேலும் ‘ஆதிபுருஷ்’ இதர தாயாரிப்பாளர்கள், இப்படத்தின் முன் பதிவு டிக்கெட்டுகள் விற்பனையின் அடிப்படையில் இப்படம் முதல் நாளில் 80 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூன் 29 மானுடத்தின் திசை திறக்க வருகிறான் மாமன்னன்: இணையத்தை தெறிக்கவிட்ட மாமன்னன் ட்ரெய்லர்!