இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள 'ட்ரிகர்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று(செப்.16) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர்கள் சின்னி ஜெயந்த், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட நடிகர் சின்னி ஜெயந்த், 'அதர்வாவின் நடிப்பு அற்புதமாக உள்ளது. சண்டைக்காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளார். இவரை ஜூனியர் கேப்டன் என்று சொல்லுவேன். 38 ஆண்டுகளில் சில நல்ல படங்கள் பண்ணி இருக்கிறேன். அதில் சிறந்த படம் இந்த ட்ரிகர்.
இந்தப் படம் முழுவதும் இரவு தான் காட்சிப்படுத்தப்பட்டது. சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் காலை 4 மணிக்கு தான் எடுப்பார். இயக்குநர் சங்கர், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்த கலவை தான் சாம் ஆண்டன். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்.
முரளி உடன் 22 படங்கள் நடித்து உள்ளேன். அதர்வா உடன் நடித்த முதல் படம் இது. நான் நிறைய நடிகர்கள் உடன் நடித்து இருக்கிறேன். ஆனால், அதர்வா நல்ல நடிகர். இந்தப்படத்தில் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும். அமிதாப் பச்சன் என்று தான் காலேஜ் படிக்கும்போது அருண் பாண்டியனை அழைப்பார்கள்.
நியூ காலேஜில் தான் அவரை முதலில் பார்த்தேன். அருண் பாண்டியன் நடித்த முதல் படமான ’ஊர் குருவி’ படத்தில் நான் நடித்தேன். இது ஒரு வெற்றி கூட்டணி' என்றார்.
இயக்குநர் சாம் ஆண்டன் இதுகுறித்து கூறுகையில், ' இக்கதையை பத்து நிமிடங்கள் கேட்டவுடனேயே தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட்டார். இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. நான் 5 படங்கள் பண்ணியுள்ளேன், நாங்கள் கேட்பதை விட அதிகமாகவே எங்களுக்கு அளித்து, களைப்பே தெரியாமல் பார்த்துக் கொண்டார் தயாரிப்பாளர். '100' படத்திற்கு பிறகு பெரிய படம் பண்ண வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
இந்தப்படம் வெற்றி பெற்றால் அதற்கு நடிகர் அதர்வா தான் காரணம். என்னை விட அதிகமாக இந்தப் படத்திற்கு உழைத்தவர், அதர்வா. எனக்கு முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு வருபவர், நடிகை தான்யா, அந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்தார். இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என முன்பே கூறி இருந்தார்.
என்னை underrated இயக்குநர் என்று கமெண்ட் செய்தவர்களுக்கு நன்றி, தோனி, கோலி இருந்தாலும், நான் டிராவிட், லக்ஷமணாக இருந்து என் பணியை செய்துகொள்கிறேன். என்னுடன் இருந்த துணை இயக்குநர்கள் அனைவரும் படம் இயக்கிவிடுவர். அந்த லக் எனக்கு உள்ளது. அடுத்து வர உள்ள 5 திரைப்படங்கள் என்னுடன் பணி செய்த துணை இயக்குநர்கள் இயக்குகின்றனர் என்ற பெருமை எனக்கு உள்ளது. எனக்கு இது மகிழ்ச்சியாக தான் உள்ளது’ என்றார்.
நடிகர் அதர்வா பேசுகையில், “இந்தப் படம் தொடங்கியதில் இருந்தே ஒரு பாசிடிவ் வைப் எங்களுக்கு இருந்தது. நாங்கள் கூறிய ஆலோசனைகளை ஏற்று இயக்குநர் ஒரு சில மாற்றங்களை படத்தில் செய்தார். ஒரு நல்ல படம் செய்துள்ளேன் என்ற மன திருப்தி எனக்கு இந்தப் படம் கொடுத்துள்ளது. சாம் உடன் இரண்டு படம் பண்ணியுள்ளேன், அவர் டென்ஷன் ஆகி நான் பார்த்ததே இல்லை.
அருண் பாண்டியன் சாரை முதல் முறை பார்க்கும் போது அவரிடம் எப்படிப்பேசுவது என்றே தெரியாமல் பயந்தோம், அதன் பிறகு எங்களுள் ஒருவராக மாறிவிட்டார். நான் சிறுவனாக இருக்கும் போது, அப்பா உடன் ஷூட்டிங் போய் பார்ப்பேன். அப்போது சின்னி ஜெயந்த் சாரை பார்த்ததுண்டு, அதன் பிறகு என்னுடன் நடிக்கும்போது தான் பார்த்தேன். அப்போது எப்படி பார்த்தேனோ, அப்படியே இப்போதும் இருக்கிறார்.
எதிர்காலத்தில் நான் காலேஜ் சப்ஜெக்ட் படம் செய்தாலும் அதில் சின்னி ஜெயந்த் சார் நடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நானே குறைவாகத் தான் பேசுவேன், என்னை விட குறைவாகப் பேசுகிறார் நடிகை தான்யா. வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவு தேவை” என்றார்.
இதையும் படிங்க: 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து வெளியிடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அறிவிப்பு