சென்னை: நண்பன் குழுமம் சார்பில் புதிதாக நண்பன் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஶ்ரீராம், நடிகர்கள் ஆரி, நாசர், ரோபோ சங்கர் மற்றும் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி உள்ளிட்டப் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சினிமாவில் சிறந்து விளங்குவோர், விவசாயம் எனப் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோர் மற்றும் அவர்களது துறையில் சிறந்து விளங்குவோர் எனப் பலரும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்ற போர் தொழில், அயோத்தி, டாடா, குட் நைட், அயலி போன்ற திரைப்பட இயக்குநர்களுக்கு சிறப்பு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் நடிகை தமன்னா 'காவாலா' பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் விழாவின் இறுதியில் அவரது நடன நிகழ்ச்சி அரங்கேறியது. ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காவாலா’ பாடலுக்கு நடனமாட அரங்கத்தில் சுற்றியிருந்த அனைவரும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: யோகி பாபுவின் புரொடக்சன் நம்பர் 1 - வாழ்த்திய பிரபலங்கள்!
மேலும் நடிகர் நண்பன் குழுமத்தின் விளம்பரத் தூதர் ஆரி பேசியது, ”என்னுடைய வாழ்க்கையில் நண்பர்கள் பலர் என்னை ஆதரித்தனர். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நண்பர் உதவி செய்வார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நான் என்ன செய்வேன் என்று நினைத்தேன். அப்போது தான் நண்பன் குழுமம் என்னை நண்பனாக அறிமுகப்படுத்தியது.
இந்த கைக்கு கொடுத்தது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்பது போல் தான் நண்பன் குழுமம் உதவி செய்து வருகிறது. என்னை பிராண்ட் அம்பாசிடராக அறிமுகப்படுத்தியுள்ளது, நண்பன் குழுமம். தொழில் நேர்மை மிக முக்கியம். தண்ணீர் என்றும் நிறம் மாறாது.
அதே போல் தான் என் நண்பன். பிக் பாஸ் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. எந்த படமும் பண்ணவில்லை. நம்பிக்கையுடன் இருந்தேன். அப்போது தான் நண்பன் குழுமம் என்னை பிராண்ட் அம்பாசிடர் என்று அறிமுகப்படுத்தியது. ஜூலை 23 என் மகன் பிறந்த தினம். இன்று வரை நான் சென்று அவனைப் பார்க்கவில்லை. அதற்காக என் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளைக் கடந்த 'சுப்பிரமணியபுரம்' - திரையரங்கில் ரீ ரிலிஸ்!