தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு,இந்தி என பல மொழிகளின் திரையுலகிலும் 80ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கதாநாயகிகளுக்கு போட்டியாக ரசிகர்களின் மனதை ஆட்கொண்டவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா,
ஆந்திராவின் பெலுருவில் 1960 ஆம் ஆண்டு இதே நாளில் (டிச.2) பிறந்த விஜயலட்சுமிதான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் வசீகர கண்களால் ஆக்கிரமிக்க போகிறாள் எனத் தெரியாது. இளம் வயதிலேயே திருமணம், கணவனின் கொடுமை என அனைத்தையும் சந்தித்தார். பின் வீட்டில் இருந்து வெளியேறினார். ஏழை குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என அலாதி பிரியம் இருந்தது.
ஒப்பனைக் கலைஞராக தமிழ் சினிமாவில் இருந்த விஜயலட்சுமியை சில்க் ஸ்மிதாவாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்த வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில்க்கின் பாடல் இடம்பெற்றால் படம் வெற்றி என்ற அளவிற்கு இவரின் கவர்ச்சி பாடலுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 80 களின் பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கூட உடனே கிடைத்து விடும். ஆனால் சில்க்கின் கால்ஷீட்டிற்கு காலம் எடுக்கும் என்ற அளவிற்கு பிஷியாக நடித்துக் கொண்டிருந்தார்.
ஹீரோக்களுக்கு பொருத்தமான நடிகையை தேர்வு செய்வதில் அல்லாடும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், தன்னுடன் நடனம் ஆடுவதற்காக ஹீரோவை காக்க வைத்த பெருமையை சிலுக்கை தவிர வேறு யாரும் பெற்றதில்லை.ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள் போன்றவர்களை கடந்து சிலுக்கு பாடல் உள்ளது, அவர் சில காட்சிகளில் வருகிறார் என்று கூறி படத்தின் வியாபாரத்தை எளிதாக முடித்து வைக்க காரணமாக இருந்திருக்கிறார்.
கச்சிதமாய் பொருந்திய சில்க்: நகைச்சுவை நடிகர்கள் நம்மை எவ்வளவுதான் சிரிக்க வைத்தாலும், அவர்கள் கண்கள் கலங்கினால் ரசிகர்களின் மனம் நொந்து விடும். அது போலத்தான் சில்க் தன் கவர்ச்சியால் கவர்ந்து இழுத்ததை தாண்டி அவரது நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட தவறியதில்லை.
கவர்ச்சி நடிகை என்ற டேக்லைன் அவர் மீது மிக அழுத்தமாக இருந்த போதிலும் நடிப்பால் ரசிகர்களின் மனதை கலங்கச் செய்தவர். அதற்கு எடுத்துக்காட்டாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் கதாபாத்திரம் தான்.

மேலும் ரஜினியின் மூன்று முகம் மற்றும் கமலின் மூன்றாம் பிறை சிறந்த படங்கள் ஆகும். கோழி கூவுது படத்தில் பிரபு மீதான காதலை ஏக்கத்துடன் சிறப்பாக நடித்து இருப்பார். அசத்தல் நடனம், கவர்ந்திழுக்கும் கண்ணின் கவர்ச்சி, கலங்க வைக்கும் நடிப்புத் திறமை என அனைத்து இடங்களிலும் சில்க் அவரது முத்திரையை பதித்து சென்றார்.
17 வருட சினிமா வாழ்க்கையில் 80 களின் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான கமல், ரஜினி, சிரஞ்சிவீ மற்றும் மோகன்லால் என அனைவருடன் நடித்த பெருமை உடையவர் சில்க்தான். நடனம், நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தாலும் படம் தயாரிப்பில் இறங்கிய சில்கிற்கு ஏமாற்றமே பரிசாய் கிடைத்தது.
ரூ.2 கோடி நஷ்டம், காதல் தோல்வி ஆகிய காரணங்களால் 1996 ஆம் ஆண்டு செப்.23 ஆம் தேதி சில்க் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பலர் சில்க் கொல்லப்பட்டதாகவும் சந்தேகிக்கின்றனர்.

இத்தனை துயரங்களையும் தூக்கி சுமந்த அந்த காந்த கண்ணழகி சில்க்கின் பிறந்தநாள் இன்று (டிச.2) அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து இதுவரை சில படங்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் 2011 இல் ‘தி டர்டி பிக்சர்ஸ்’ வெளியாகி வித்யா பாலனுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. கன்னடம் மற்றும் மலையாளத்திலும் சில்க்கின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க:வடிவேலு நடிப்பில் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" ட்ரெய்லர் வெளியீடு!