சென்னை: இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடிப்பில் வெளியான "ஜான்சி" வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்த இந்த வெப் சீரிசில், நடிகை அஞ்சலியும், நடிகை சாந்தினி சௌத்ரியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும், முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா, சம்யுக்தா ஹார்நத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசும்போது, "சீசன் 1 தமிழ், தெலுங்கு, இந்தியில் நல்ல ஹிட். இப்போது சீசன் 2 நன்றாக போகுமென்று நம்புகிறேன். சீசன் 1 விட 2 எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயக்குனர் திரு அசத்தியிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி முழு காய்ச்சலோடு வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இதனை முதலில் 6 மாதத்தில் முடித்து விடலாமென்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் 2 வருடங்கள் ஆகிவிட்டன. இதில் சீசன் மூன்றும் வரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்றார்.
இயக்குநர் திரு பேசும்போது, " சீசன் 1-க்கு நல்ல வரவேற்பு வந்தது. ஹாட்ஸ்டார் இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகச் சொன்னார்கள். இரண்டாவது சீசன் எனும் போது கொஞ்சம் தயக்கம் இருந்தது, ஆனால் சீசன் 1 போலவே இதற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இதைத் தெலுங்கில் முழுக்க செய்திருந்தாலும் தமிழ் ஆடியன்ஸ்க்கும் பிடிக்க வேண்டுமென உழைத்திருக்கிறோம். இதில் உழைத்த அஞ்சலி, சாந்தினி மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. என் படக்குழுவிற்கும் நன்றி. சீசன் 1 போலவே 2வது சீசனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சத்ய சிவா, "இந்த சமூகத்தில் பெண்களுக்கு நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது. அதைப் பெண்கள் எப்படித் தாண்டி வர வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியுள்ள சீரிஸ். மிகச் சிக்கலான லோகேஷன்களில் நிறைய கஷ்டப்பட்டு எடுத்துள்ளார்கள். விஷுவல் பார்க்கும் போதே அந்த பிரமாண்டம் தெரிகிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாம் அபாரமாக இருக்கிறது. சீசன் 2க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சீசன் 3க்கும் வரவேற்பு இருக்குமென நம்புகிறேன். பெண்களுக்கான பாடமாக இந்த சீரிஸ் இருக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: Exclusive: 'பெற்றோருக்கு இத உணர்த்தனும்' மனம் திறக்கும் 'அயலி' இயக்குனர்!