சென்னை: நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் "வாரிசு" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா, ஷாம், சரத்குமார், பிரபு, சங்கீதா என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில், வாரிசு திரைப்படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் கசிந்து வருகிறது. கடந்த மாதம் நடிகர் விஜய் மற்றும் பிரபு நடித்த மருத்துவமனை காட்சி ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் கசிந்தன. இதனால் நடிகர் விஜய் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
அதேபோல் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனால் செய்வதறியாமல் திகைத்த படக்குழு, பாடல் காட்சி கசிந்த உடனேயே அந்த பாடலை வெளியிட்டது.
'ரஞ்சிதமே' என்ற அந்த பாட்டுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிவது படக்குழுவுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
![விஜய் - ராஷ்மிகா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-vijay-varisu-script-spl-7205221_16112022114221_1611f_1668579141_586.jpg)
இந்நிலையில் மீண்டும் ஒரு படப்பிடிப்பு காட்சி கசிந்துள்ளது. வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் பெல்லாரி அருகே ஒரு காட்டுப் பகுதியில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
நிறைய லாரிகள் செல்வது, வெடிகுண்டுகள் வெடிப்பது, நிறைய வாகனங்கள் ஊர்வலமாக செல்வது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளன. இது மீண்டும் படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விஜய் படங்களில் ஏதாவது குளறுபடிகள் நடந்த வண்ணமே இருக்கும், அது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் புதிதல்ல. இருந்தபோதும் தங்களுக்கு மட்டுமே இப்படி நடக்கிறது என்று கதறிக்கொண்டு இருக்கின்றனர். மற்றொரு தரப்பினரோ இது படக்குழுவினர் திட்டமிட்டு வெளியிடும் வீடியோ என்கின்றனர்.
வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளதால், படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவினரே இப்படி வீடியோக்களை லீக் செய்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. விஜய் போன்ற ஒரு மாஸ் நடிகருக்கு, இத்தகைய விளம்பரம் தேவையில்லை என்கின்றனர் சிலர்.
எது எப்படியோ படம் வெளியாவதற்குள் இணையதளத்திலேயே மொத்த படமும் வெளியாகாமல் இருந்தால் சரி என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு வாரிசு திரைப்படம் வெளியாகிறது. அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையை குறி வைத்துள்ளது.
இதையும் படிங்க:"டான் படம் பார்த்த போது சிரிப்பே வரவில்லை" - உதயநிதி ஸ்டாலின்!