சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏப்.13ஆம் தேதி பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு, இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு நடிகர் விஜய் பேட்டியளித்தார். இந்தப் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பானது.
அப்போது, 'விஜய் 66' நேரடித் தெலுங்குப் படமா? என்ற கேள்வியை நெல்சன் திலிப்குமார் எழுப்பினார். இதற்கு தனது பாணியிலேயே பொறுமையாக பதிலளித்த நடிகர் விஜய், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இது, முழுக்க முழுக்க தமிழ் படம்தான். வழக்கமாக என்னுடைய திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
அதுபோல்தான் இந்தப் படமும் தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. படத்தில் இயக்குனர் வம்சி உள்ளிட்ட தெலுங்கு கலைஞர்கள் இருப்பதால் இந்தக் கேள்வி எழுகிறது. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. இது முழுக்க முழுக்க தமிழ் படம் ஆகும்” என்றார்.
தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் , 'தளபதி 66' இரட்டை மொழி (தமிழ், தெலுங்கு) படமா எனக் சந்தேகம் எழுப்பினார். இதையும் நடிகர் விஜய் மறுத்துவிட்டார். இந்தப் படம் முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும், தமிழில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தான் வம்சி என்னை அணுகினார்” என்று பதிலளித்தார். விஜய் 66 படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தற்போது கிளப்பியுள்ளது.
தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நம்பர் 1 கதாநாயகி ஆக வலம் வருகிறார். அதேபோல் இயக்குனர் வம்சியும் தெலுங்கில் முன்னணி இயக்குனர் ஆவார். இவர் நடிகர் மகேஷ் பாபுவுடன் பல ஹிட் படங்களில் பணியாற்றியவர் ஆவார். இதனால் தளபதி 66 நேரடித் தெலுங்குப் படமா? என்ற கேள்வியெழுந்தது. அதற்கு தனது பாணியிலேயே க்யூட் ஆக பதிலளித்துள்ளார் தளபதி.
இதையும் படிங்க : பீஸ்ட், கேஜிஎஃப் - மோதலா? - நடிகர் யாஷ் விளக்கம்