நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். தமிழ் சினிமாவில் என்றென்றும் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் என்ற அடையாளத்தோடு இருந்தாலும், சூர்யாவுக்கு சினிமாவில் நடிக்க துளியும் விருப்பமில்லை. வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆசை' படத்தில் நடிக்க முதலில் சூர்யாவை அழைத்தார்கள். ஆனால், அதில் ஆசையின்றி மறுத்தார். சினிமா ஆசையே இல்லாமல் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் சிறிது காலம் வேலை செய்தார்.
பிறகு இயக்குநர் வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படத்திற்கு மீண்டும் ஒரு புதுமுகத்தை தேடிவந்தார். பின்னர், அவர் சூர்யாவை இதில் நடிக்க வைத்தார். இப்படித்தான் சரவணன் என்கிற சூர்யா தமிழ் சினிமா உலகிற்குள் நுழைந்தார். முதல் படமே விஜயுடன் இணைந்து நடித்தார். சூர்யாவுக்கு அப்போது நடிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் அப்படத்தில் அவரது நடிப்பு கேலிக்குள்ளானது.
'ரொம்ப சொதப்பீட்டிங்க': சூர்யா குறித்து நடிகர் சிவக்குமார் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "சூர்யாவுக்கு நான்கு வார்த்தைகள் கோர்வையாக பேச வராது. படிப்பும் வராது. அவனது முதல் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அவனிடம் வந்து 'ரொம்ப சொதப்பீட்டிங்க' என்று சொன்னார்கள்" என்றார்.
அதுதான் அவனது முதல் விமர்சனம் என்றும் பேசினார். நடிப்பு வரவில்லை, நடனமும் தெரியாது, நடிகரின் மகன் என்பதால் நடிக்க வந்துவிட்டார் என்று பலரும் விமர்சித்தனர். 'நேருக்கு நேர்' படத்தை தொடர்ந்து 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'பெரியண்ணா', 'பிரண்ட்ஸ்' என சில படங்களில் நடித்தார்.
முரட்டு இளைஞனாக மிரட்டிய 'நந்தா': ஆனால், பாலாவின் இயக்கத்தில் நடித்த 'நந்தா' படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை கேலி செய்தவர்களிடம் தன்னை நிரூபித்து காட்டினார். முரட்டு இளைஞனாக மொட்டை அடித்துக்கொண்டு நடிப்பில் தூள் கிளப்பினார். அதன் பிறகு தான் சூர்யா என்னும் நடிகன் ரசிகர்களுக்கு மத்தியில் பரிட்சயமானார்.
என்றென்றும் அன்புசெல்வன் ஐபிஎஸ்: அதனை தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'காக்க காக்க' சூர்யாவின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. இன்றுவரை சூர்யாவின் முக்கிய படங்களின் வரிசையில் 'காக்க காக்க' படத்திற்கும் இடமுண்டு. பிறகு மீண்டும் பாலாவுடன் 'பிதாமகன்' படத்தில் இணைந்தார்.
சூர்யாவுக்குள் அபாரமான நகைச்சுவை கலைஞன் இருப்பதை தமிழ் சினிமா ரசிகன் கண்டுகொண்ட தருணம் அது. 'பேரழகன்' படத்தில் கூன் விழுந்த கதாபாத்திரத்தில் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்து புதிய உச்சம் தொட்டார்.
கஜினி படத்தில் 'ஷார்ட் டைம் மெமரி லாஸ்' என்ற மனநல பாதிப்பிற்கு உள்ளான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அனைவரும் பாராட்டும் வகையில் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருந்தார் சூர்யா. அதுதான் அவரது தன்னம்பிக்கையின் அடையாளம். ஆறு, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் சீரிஸ் என வெற்றிப்படங்களை தந்த அவருக்குஸ கடந்த சில ஆண்டுகளாக படங்கள் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
'சூரரைப்போற்று' படத்தில் கனவுகளுடன் சுற்றும் ஒருவன் தனது லட்சியத்தை எத்தனை தடைகள் வந்தாலும் மோதி வெற்றிபெறும் இளைஞனாக தனி முத்திரை பதித்தார். ஆனால் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும் படமாக சூர்யாவுக்கு 'ஜெய்பீம்' அமைந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தரும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்தார். காரணம் ஆஸ்கார் போட்டி வரை 'ஜெய்பீம்' சென்றது. இது எல்லோருக்கும் பெருமைமிகு தருணமாக அமைந்தது. நடிப்பு தவிர தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தரமான படங்களை தயாரிப்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளார் சூர்யா.
அகரம் வழியாக சிகரம் ஏறியவர்: தனது படம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் எப்போதும் ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார். இதுவே இவரது கடின உழைப்பு அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது 'அகரம் பவுண்டேஷன்' மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க உதவி செய்து வருகிறார்.
மேலும் தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக கொடுப்பவர் சூர்யா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படத்தில் ’ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் கொலைவெறி பிடித்த வில்லனாக மிரட்டினார்.
இப்போது எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவது போல் 'சூரரைப்போற்று' படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இது சூர்யாவின் முதல் தேசிய விருது. இந்த விருது மூலம் சூர்யாவின் மறக்க முடியாத பிறந்தநாளாக மாறிவிட்டது. நடிக்கவே தெரியாது என்று விமர்சிக்கப்பட்ட சூர்யா இன்று சிறந்த நடிகருக்கான விருது பெற உள்ளார். இன்னும் சூர்யா பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது வெற்றியோடு பயணிக்க நாமும் வாழ்த்துவோம்.
இதையும் படிங்க: தேசிய விருதுகளை அள்ளிய ”சூரரைப் போற்று”