சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் ஜெர்ஸி, கேங் லீடர், ஷியாம் சிங் ராய் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. தற்போது நானி, ஹாய் நான்னா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் சென்னையில் ஹாய் நான்னா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நானி, "இது டப்பிங் படம் போல் இருக்காது. டிசம்பர் 7ஆம் தேதி நீங்கள் பார்க்கும் போது ஒரிஜினல் தமிழ் படம் போல் இருக்கும். தசரா படத்திற்கு பிறகு உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்ப நாட்களுக்கு பிறகு காதல் கலந்த இனிமையான படத்தில் நடித்துள்ளேன்.
ஹாய் நான்னா திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய படம். நான் ஈ படத்தில் இருந்து எனக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தசரா படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்தது எனக்கு ஹாலிடே மாதிரி இருந்தது. மும்பை, கோவா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. நல்ல துணி உடுத்தினேன். கடின உழைப்பிற்கான படம் இது இல்லை.
தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசியதற்கான காரணம் குறித்து கூறிய நானி, நான் தமிழ் படங்கள் நடித்துள்ளேன். தமிழ் படங்கள் பிடிக்கும். மணிரத்னம், கமல்ஹாசன் படங்களும் பிடிக்கும் இதை நிறைய நேர்காணல்களில் சொல்லியுள்ளேன். இப்போது கூட எனக்கு தமிழ் நல்லா புரியும் ஆனால் சரளமாக பேச வராது. அடுத்த முறை வரும் போது நன்றாக தமிழ் பேச முயற்சிக்கிறேன்" என்றார்.
இந்த படம் ஏன் தந்தை சென்டிமென்ட் குறித்த என்ற கேள்விக்கு, அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட் எல்லாம் ஒன்றுதான் என்றார். அனிமல் படமும் வேறுவிதமான அப்பா சென்டிமென்ட் படமாக வருகிறது, எனது படமும் வருகிறது, டிசம்பர் மாதம் அப்பாக்கள் மாதம் என்றார். தமிழில் முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்கிறேன். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
ஹாய் நான்னா படத்தில் அதிக முத்தக் காட்சிகள் இருக்கிறது, இது தேவையா என்ற கேள்விக்கு, "இது 2023, இருபது ஆண்டுகளுக்கு முன்பு விளக்கை அணைத்தாலே குழந்தை பிறந்து விடும் என்று குழந்தைகள் நினைத்துக் கொண்டு இருந்தனர். இப்போது முத்தம் என்பது சகஜமாகி விட்டது.
டிவியில் காட்டினால் என்ன தவறு. நீங்கள் யாரும் உங்கள் மனைவிக்கு முத்தம் கொடுத்தது இல்லையா. சினிமாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உறவுமுறைகளை நம்பகத்தன்மை உடன் காட்ட வேண்டியுள்ளது" என்றார். ரஜினியுடன் நடிப்பதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, "தமிழ் சினிமாவில் இருந்து நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.
தற்போது எனது கேரியர் மீது முழு கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் அதுபோல எதாவது நடந்தால் மகிழ்ச்சி" என்று கூறினார். உங்கள் படத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது பற்றி, "நமது வாழ்வில் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அம்மா, மனைவி, சகோதரி என பல பெண்கள் நம் வாழ்க்கையை பாதுகாக்கின்றனர். ஏன் எனது படத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கக்கூடாது.
அவர்கள் இல்லாமல் எதுவும் முழுமை அடையாது. இப்படத்தில் நானி, மிருனாள் தாக்கூர் எல்லாம் தெரியாது கதையாகத்தான் பார்ப்பீர்கள் உங்களுடைய உணர்வுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்" என்றார். ராஜமௌலி உடன் எப்போது இணைவீர்கள் என்ற கேள்விக்கு, "எனது கையில் ஒன்றும் இல்லை அவர் தான் சொல்ல வேண்டும்" என்று நடிகர் நானி கூறினார்.
இதையும் படிங்க: "அந்த மனசுதான் சார் கடவுள்".. சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட நபருக்கு உதவிய ஜி.வி பிரகாஷ்.. குவியும் பாராட்டுகள்!