தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் இயக்கி நடித்து வெளியான விருமாண்டி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்தார். நிஜ வாழ்வில் மனித நேயமிக்கவராக வாழ்ந்து வருபவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினர் உடன் புத்த மதத்தை தழுவினார்.
இதுகுறித்து அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, " கடந்த 5 ஆண்டுகளாகவே புத்த மதத்தை தான் பின்பற்றி வருகிறேன். இப்போதுதான் மௌரியா முன்னிலையில் அடையாளப்படுத்தியுள்ளேன். அம்பேத்கரின் 21 உறுதிமொழிகளை ஏற்று பௌத்த மதத்தை தழுவியுள்ளேன்.
இந்தியா ஒரு பௌத்த நாடு. அதற்கான சான்றுகள் வரலாற்றில் உள்ளன. அதுமட்டுமின்றி மற்ற எல்லா மதத்திலும் சாதி உள்ளது. இதில் சாதியில்லை. மனிதநேயத்துடன் வாழ வேண்டும்.
சாதியை சார்ந்து வாழக்கூடாது என்பது எனது குறிக்கோள். புத்தரை கடவுளாக பார்க்கவில்லை. நல்ல மனிதநேயராக பார்க்கிறேன். சாதி ஒரு குப்பை. நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன். இதில் நடைமுறை சிக்கல் எதுவும் கிடையாது.
இதில் புலால் உண்ணுதல், பொய் சொல்லுதல், உயிர்வதை போன்ற எந்தவித தீய பழக்கங்களும் கூடாது. எனது மனைவி, குழந்தைகளை நான் கட்டாயப்படுத்தவில்லை.
அவர்களாகவே இம்மதத்தில் உள்ள நல்ல எண்ணங்களை உணர்ந்து ஏற்றுக் கொண்டனர். நான் ஒரு அம்பேத்ரிஸ்ட் அவரது கொள்கையின் படி வாழ்ந்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கவிதாலயா தயாரிப்பில் நடிக்கும் ஜிவி.பிரகாஷ்குமார்!