தமிழ் சினிமாவில் கடின உழைப்பும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்தை அடையலாம் என்பதற்கு நிறைய பேர் உதாரணமாக உள்ளனர். அப்படி எந்தவொரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் பிறந்தவர். இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் வங்கிப் பணியை உதறித்தள்ளி விட்டு இனி சினிமாதான் வாழ்க்கை என்று வந்தவர்.
முதலில் ஒரு குறும்படம் எடுக்கிறார். குறும்பட போட்டி ஒன்றில் அந்த குறும்பட போட்டிக்கு நடுவராக வந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இவரது படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டுகிறார். அதுமட்டுமின்றி இவர் தயாரித்த அவியல் என்ற அந்தாலஜி படத்தில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுக்கிறார். அவியல் என்ற அந்த படத்தில் இவர் இயக்கிய படம் களம். அந்தப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
பிறகு தனது முதல் தமிழ்ப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் தமிழில் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புரொடக்சனில் உருவானது. அந்த படம்தான் 2017-ல் வெளியான மாநகரம். ஸ்ரீ, சந்தீப் கிஷன் என அப்போது ரசிகர்களிடம் பெரிதும் அறிமுகமில்லாத இருவரை வைத்து தைரியமாக அப்படத்தை எடுக்கிறார் லோகேஷ் கனகராஜ். தனது படத்தின் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. யார் இந்த லோகேஷ் கனகராஜ் என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த படத்தில் ஒன்றின் மீது ஒன்று தொடர்புடைய காட்சிகளை கோர்வையாக தொகுத்து அருமையான திரைக்கதை அமைத்திருந்த விதம் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
பெரிதாக அறிமுகமில்லாத நடிகர்களை முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அப்போதே அவர்களுக்கு நல்ல மாஸ் காட்சிகளை வைத்திருந்தார். வெளியூரில் இருந்து சென்னையில் வந்து பிழைப்பு நடத்துபவர்கள் சென்னையை திட்டுவார்கள்; அவர்களுக்கு தக்க பதிலடியை இப்படத்தில் கொடுத்திருந்தார். இங்க நீ யாருக்காவது உதவி செஞ்சாதான் அவங்க நமக்கு உதவுவாங்க அப்படினு புத்தி புகட்டினார்.
ஆகவே, இந்த முதல் படம் வெற்றி; நல்ல இயக்குனர் என்ற பெயர் பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஒரு அறிமுக இயக்குனரின் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்றால் எவ்வளவு பெருமைமிகு தருணமாக இருந்திருக்கும். அதுமட்டுமின்றி மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்திருந்த காமெடி வேடத்தில் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
அப்படி என்றால் அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பு எந்த அளவில் இருந்துள்ளது என்று பாருங்கள். அடுத்த படத்தை ஒரு சாதாரண படமாக எடுக்க நினைத்தார். அப்போது லோகேஷ் கனகராஜ் மனதில் தோன்றிய நபர் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகானை வைத்து ஒரு கதையை தயார் செய்திருந்தார் அவர். மன்சூர் அலிகானை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பல்வேறு போட்டிகளில் அவர் சொல்லியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் கார்த்தி நடித்தார். இப்படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. ஒரே இரவில் நடக்கும் கதையாக பாடல்களோ கதாநாயகியோ எதுவுமே இல்லாத படமாக கைதி அமைந்தது. ஆனாலும் அமைதியாக வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கார்த்தி போன்ற ஒரு நடிகரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வித்தையை நன்கு அறிந்து கொண்டு இப்படத்தை பக்காவாக பறிமாறியிருந்தார் லோகேஷ். அதுமட்டுமின்றி கார்த்தியின் கேரியரில் முதல் ரூ.100 கோடி வசூல் படமாகவும் கைதி அமைந்தது. இந்த படத்தை பார்த்த ஒட்டுமொத்த திரையுலகமுமே, யார் இந்த லோகேஷ் கனகராஜ் என்று வாய்யைப் பிளந்தது.
இந்த படம் வெளியாவதற்கு முன்னரே லோகேஷ் கனகராஜை தேடி மிகப்பெரிய வாய்ப்பு வந்தது. அதுதான் விஜய்யை இயக்கும் வாய்ப்பு. தமிழில் இரண்டு படம் மட்டுமே இயக்கியிருந்த ஒரு இயக்குனருக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதுவே லோகேஷின் திறமைக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்பட்டது. வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட லோகேஷ் ஆடிய ஆட்டம் தான் மாஸ்டர். விஜய்யை இதுவரை இல்லாத அழகோடு மாஸாகவும் காட்டியிருந்தார் மாஸ்டர் படத்தில். கரோனாவால் சிக்கித் தவித்த தமிழ் சினிமாவையும் திரையரங்குகளையும் மீட்டெடுத்தது இந்த மாஸ்டர் திரைப்படம்.
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகள் நோக்கி வரவழைத்தது இந்த விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி. முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய்க்கு எதிராக வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். பவானியாக திரையில் தாண்டவமாடியிருந்தார் விஜய் சேதுபதி. குடிகார வாத்தியாராக விஜய், சீர்திருத்த பள்ளிக்கு வார்டனாக சென்றபின் திரைக்கதை பற்றி எரியும். ஆனாலும், இது எனது முழு படம் கிடையாது. பாதி சதவீதம் தான் என் படம் அடுத்த படத்தில் விஜய்யுடன் இணையும் போது, எனது நூறு சதவீத சம்பவத்தை பார்ப்பீர்கள் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை வசூல் செய்தது.
இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் செய்த தரமான சம்பவம் தான் 'விக்ரம்'. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவையே உலுக்கிய படம் விக்ரம். கமலின் பழைய விக்ரம் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை அப்படியே வைத்துக் கொண்டு புதிய திரைக்கதையை உருவாக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால், இம்முறை அவர் நிகழ்த்தியது மாயாஜாலம்.
ஹாலிவுட் படங்களில் வரும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் போல் புதிய திரைக்கதை யுக்தியை கையாண்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதுதான் லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸ்(Lokesh Cinematic universe). அதாவது இவரது முந்தைய படங்களில் வந்த கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் வருவது போல் திரைக்கதை அமைத்திருந்தார்.
இது ரசிகர்ளுக்கு புதுவித அனுபவமாக இருந்தது. குறிப்பாக கைதி படத்தில் வந்த சில கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் வரும். கைதி கார்த்தி கதாபாத்திரம்கூட இதில் வரும். அந்த அளவுக்கு திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தார். அதுமட்டுமின்றி படத்தில் இருந்த கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி இந்த மூவரின் கூட்டணி ரசிகர்களிடம் மிகவும் பேசப்பட்டது. அத்துடன் படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன கேரக்டர்கள் கூட ரசிக்கப்பட்டன. குறிப்பாக, ஏஜெண்ட் டீனா கேரக்டரை முதல்முறை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர்.
இப்படி இந்த காலத்துக்கு ஏற்றபடி படத்தை செதுக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் விக்ரம் படத்தை போன்ற ஒரு வெற்றிப்படத்தை கமல்ஹாசனே இதுவரை கொடுத்ததில்லை. இந்த படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து புதிதாக படத்தை தயாரித்து வருகிறார். ஏனென்றால், விக்ரம் படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து பிரமாண்ட சாதனை படைத்தது. இதனால், லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார்.
தற்போது மீண்டும் விஜய்யை வைத்து 'லியோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இது 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் சம்பவமாக உருவாகி வருகிறது. இப்படி தனது 4 படங்களிலேயே மிகப் பெரிய இயக்குனராக உருவாகியுள்ள லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: இரு பெண்களின் கையில் ஆஸ்கர்.. 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' குறித்து மு.க.ஸ்டாலின் புகழாரம்!