சென்னை: சினிமா உலகத்தில் யார் வேண்டுமானாலும் நடித்து வெற்றி கொடுக்க முடியும். ஆனால் ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று சேர்வது எளிதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட வேண்டும் என்றால், நடிப்பைத் தாண்டிய ஒரு பந்தம் ஏற்பட வேண்டும். அதற்கு ஒரு நடிகரிடம் வசீகரத் தன்மை இருக்க வேண்டும். இத்தகைய குணாதிசயங்களைக் கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய்.
சினிமாவில் ஒரு நாயகன் உருவாக ஆயிரம் பேர் துணை இருக்காலாம், உந்துகோளாக இருக்கலாம், ஆனால் அதனைச் சரியான பாதையில் கடைசி வரை கொண்டு செல்வதற்குத் துணிவு, தன்நம்பிக்கை, அர்ப்பணிப்பு வேண்டும். இவை தளபதி விஜய் இடம் அதிகமாக உள்ளது. அப்பா துணையால் நாயகன் ஆனாலும் தன் கடின உழைப்பால் தளபதியாக உயர்ந்து நிற்கிறார்.
சாதனையாக மாறிய சோதனை : 1992-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அன்று, அப்போதைய முன்னணி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்ற படம் மூலம் திரை உலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தார் விஜய். படம் வெளியானதும் பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. “தந்தை படத்தில் மகன், தேவாங்கு மாதிரி முகத்தை வைத்து நடிக்க வந்துவிட்டார்” என்று ஒரு முன்னணி வார இதழ் விமர்சித்தது. அதே வார இதழ் “அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?” என்று நடத்திய கருத்துக்கணிப்பில், விஜய் தான் என்று அறிவித்தது. இது தான் தளபதி விஜய்யின் வளர்ச்சி.
நடிக்க வந்த புதிதில் ஏராளமான கேலி, கிண்டல்களுக்கு ஆளானார். ஆனால் தன்னுடைய விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவற்றால் ரசிகர்கள் மனதில் தளபதியாகவும் தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாகவும் கோலோச்சி வருகிறார். இவர் நடிப்பை தொடங்கிய காலகட்டத்தில், ரஜினிகாந்த் என்னும் பெயர் இமயம் எட்டாத உயரத்திலிருந்தது. இன்னொருபுறம் பிரசாந்த், அஜித் என இரு அழகான நடிகர்கள். இவர்களை எல்லாம் கடந்து சாதிக்க வேண்டும் என்றால் எவ்வளவு உழைப்பு கொடுக்க வேண்டும். அதற்காகக் கடினமாக உழைத்தார்.
சரித்திரம் படைத்த நாயகன்: அப்பாவால் சினிமாவுக்குள் நுழைந்தவர், ரீமேக் படங்களில் மட்டுமே நடித்து முன்னேறியவர் என்ற குற்றச்சாட்டு இப்போதும் விஜய் மீது உண்டு. ஆனால் அது எல்லாம் இயலாதவர்களின் இலக்கற்ற ஆயுதமாய் மாறியதே தவிர விஜய்யை ஒன்றும் செய்ய முடியவில்லை. பாலிவுட் படங்களே ரூ.100 கோடி, ரூ.200கோடி வசூல் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த போது நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தனது தொடர் வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.
விஜய்க்கு அவரது தங்கை வித்யா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் உடல்நலக்குறைவு குறைவால் சிறு வயதிலேயே வித்யா இறந்துவிட நொறுங்கிப் போனார் விஜய். அதன் பிறகு யாரிடமும் அதிகம் பேசுவதைத் தவிர்த்தார். இப்போது வரையும் அப்படியே இருக்கிறார். தற்போது அம்மா ஷோபாவை விஜய்க்கு ரொம்ப பிடிக்கும். படங்களில் கூட தனக்குத் தங்கையாக நடிப்பவர்களில் உண்மையாகவே அன்பைப் பொழிவார் விஜய். கில்லி திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழ் சினிமாவில் அதிக செல்வாக்கு மிக்க நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் விஜய்தான். விஜய்யின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.500 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் விஜயை போன்று வேறு யாரும் அத்தனை சோதனைகளைச் சந்தித்து இருக்க மாட்டார்கள். அத்தனை சோதனைகளையும் கடந்து தற்போது நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார் என்றால் அவரது தைரியம் பாராட்டத்தக்கது. தற்போது மார்க்கெட்டில் ரஜினியை விட அதிக சம்பளம் பெறுவது விஜய்தான் என்றால் மிகையில்லை.
நடிப்பும் சேவையும் : திரை உலகில் அவர் சந்திக்காத அவமானம் இல்லை. இது குறித்து, “எல்லோரது வெற்றிக்குப் பின்னால் ஆணோ பெண்ணோ இருப்பார்கள் ஆனால் எனது வெற்றிக்குப் பின்னால் நிறைய அவமானங்கள் தான் இருக்கின்றன. விமர்சனங்களைப் பார்த்துச் சோர்ந்து போய் இருந்தால் இப்போது உங்கள் முன்னால் விஜய்யாக நின்றிருக்க மாட்டேன்” என்று அவரே கூறியுள்ளார்.
நடிப்பு ஒருபுறம் இருக்க சமூக சேவைகளும் செய்து வருகிறார். தனது ரசிகர் மன்றங்களை மக்கள் நல மன்றங்களாக மாற்றி ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். தற்போது அரசியல் இயக்கமாகவும் அது செயல்பட்டு வருகிறது. வருங்காலத்தில் விஜய்யின் முடிவு என்ன என்பது தெரியாத போதும் அதற்கான முன்னேற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இளைய தளபதியாக இருந்த விஜயின் சினிமா கெரியர் தற்போது தளபதியாக மாறி டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. கொரோனா பரவல் சமயத்தில் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவுக்கும் திரையரங்குகளுக்கும் புத்துயிர் பாய்ச்சியவர் விஜய்.
பதிலடிகள் : சமீபத்திய ஆண்டுகளில் அதிக சர்ச்சைகளை விஜய் சந்தித்து வருகிறார். அவற்றில் அதிக அளவு அவரை சுற்றி இருப்பவர்களால் தான் என்பதே உண்மை. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருந்த வாழ்க்க ஜம்முன்னு இருக்கும். அதை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் “வாழ்க்கை ஒரு நதி மாதிரி தான். சில இடங்களில் வணங்குவார்கள். சில இடங்களில் பிடிக்காதவர்கள் கல் எறிந்து விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரி தான் நம் வாழ்க்கையும். நம்ம வேலை, நம்ம கடமை செமயாக செய்துவிட்டு, அந்த நிதி மாதிரியே போய்க் கொண்டே இருக்க வேண்டும். நம்மை பற்றி அவதூறு பேசுபவர்களை வெற்றியால் கொன்று, புன்னகையால் புதுக்க வேண்டும்” என்றார்.
30 ஆண்டுகள் : பல இன்னல்கள், விமர்சனங்கள், சோதனைகள் அனைத்தையும் கடந்து பிரம்மாண்டமான வெற்றி கண்டு வரும் தளபதி விஜய், 30 ஆண்டுக் கால திரைப்பயணத்தை கடந்துள்ளார். இவரது பிறந்தநாளே திருவிழாவாகக் கொண்டாடும் ரசிகர்கள், இதனைத் தெறிக்க விடப்போவது நிச்சயம். தளபதி விஜய் அடிக்கடி சொல்வது போல் அவரது “நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்” சார்பாகத் தளபதி விஜய்யின் 30 ஆண்டுக்கால திரைப் பயணத்திற்கு டிவிபி பாரத் தமிழ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: 2k kids-களுடன் Vibe Mode-ல் குத்தாட்டம் போட்ட நடிகர் வடிவேலு