கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கிரேஸி மோகன் வசனம் எழுதி ஜூலை 28, 2002இல் வெளியான திரைப்படம் 'பஞ்சதந்திரம்'. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், நாகேஷ், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது, ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இத்திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் முடிவடைந்தது.
ஐந்து வித்தியாசமான கலாசார பின்புலம் கொண்ட நண்பர்கள், அவர்களின் குடும்பத்தில் சுற்றி நடக்கும் சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண்கிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைன்.
கிரேஸி மோகனின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வசனத்தில் ’பிளாக் காமெடி’ திரைப்பட வகையில் வெளியானது 'பஞ்சதந்திரம்'. ஐந்து நண்பர்களுடன் நாகேஷ் போலீசிடம் மாட்டிக்கொள்ளும் காட்சி, ஐந்து நண்பர்கள் கான்ஃபெரன்ஸ் காலில் பேசும் காட்சி, கே.எஸ். ரவிக்குமாருடன் கமல் விமானத்தில் தொலைபேசியில் பாடல் பாடும் காட்சி எனப் பல காட்சிகளில் கிரேஸி மோகன் தனது முழு பங்களிப்பை அளித்திருப்பார்.
கமல்ஹாசன் உட்பட அனைத்து நடிகர்களும் காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகளில் தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். படத்தின் வசனங்களைப்போல் இசையமைப்பாளர் தேவாவின் இசையும் கைகொடுத்தது. இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் முணுமுணுக்கப்படுகிறது. பஞ்ச தந்திரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரும் வசூல் சாதனைப் படைத்தது.
பஞ்சதந்திரம் படத்தில் பிரபலமான கான்ஃபெரன்ஸ் காட்சியை சமீபத்தில் கமல் நடித்து வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக பயன்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’பஞ்சதந்திரம்’ சினிமா ரசிகர்களுக்கு இன்றளவும் ‘கல்ட் காமெடி’ படமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ’விக்ரம்... விக்ரம்... நான் வெற்றி பெற்றவன்’ - ஜூலை 8 இல் ஒடிடியில் வெளியாகிறது விக்ரம்’