சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' என்ற படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கிய அந்தப் படம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் மோகன் லால், சிவ்ராஜ் குமார், தமன்னா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் இப்படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் உள்ளார். இதனால் ஜெயிலர் படத்தை மிகவும் கவனமாக இயக்கி வருகிறார். படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். முன்னதாக, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத்தோற்றத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் நடிக்கும் ரஜினியின் தோற்றம் அண்மையில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதனால் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று (மே 17) மும்பை சென்றார். அங்கு ரஜினியை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிறந்த மனிதனுடன் இருப்பதை பெருமையாகவும், பாக்கியமாகவும் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் அண்மையில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பங்கேற்ற லீக் ஆட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினியை கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குளித்து கொண்டே வாகனம் ஓட்டிய இளைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்!