இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மே 6ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 425 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், தற்போது, 59 தொகுதிகளுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது.
இந்த ஆறாவது கட்ட வாக்குப்பதிவு டெல்லி, பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் வதேராவுடன் டெல்லியில் வாக்களித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லியின் மிக அதிக வயது கொண்ட வாக்காளரான பச்சன் சிங் (111) தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.
முன்னதாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமை ஆற்றினர்.