மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு இன்று அளித்த பிரத்யேக பேட்டியில்,
தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. மோடி மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அவரோடு கூட்டணி வைத்துள்ள எடப்பாடி அரசாங்கம் மீது ஒரு எதிர்ப்பலை இருப்பதை காண முடிகிறது.
எங்கள் தேர்தல் அறிக்கையில் கல்வி உரிமையில் பிரதானமாக கவனம் செலுத்தி இருக்கிறோம். அதில் குறிப்பாக, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
நதிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி, விசைத்தறி, இன்ஜினியரிங், பின்னலாடை என எல்லா சிறு, குறு தொழிலாளிகளும் மோடி அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டு நிர்மூலமாகியுள்ளனர். எனவே இவர்களையும் இந்தத் தொழில்களையும் பாதுகாக்க வேண்டும்.
வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். அரசு பணியிடங்களில் காலியாக உள்ள பணி இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகளை பிரதானமாக குறிப்பிட்டுள்ளோம்.
துரைமுருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் சதி நடந்து வருகிறது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் மீது வேண்டும் என்றே குறி வைத்து தாக்குவதன் மூலம், வளர்ந்து வருகின்ற மோடி, எடப்பாடி எதிர்ப்பலையை பின்னுக்கு தள்ளிவிடலாம் என்று திட்டமிட்டு நடத்தப்படும் சதி தானே தவிர உண்மையாகவே அவர் வீட்டில் அவ்வளவு பணம் இருந்ததாக சொல்ல முடியவில்லை.
கோடி கோடியாக பணம் விநியோகிக்கும் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை. அவர்களிடத்தில் பணமே இல்லையா? தேர்தல் விதிகளை மீறவில்லையா? எனவே சோதனை என்ற பெயரில் சதி நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பினர் திட்டமிட்டு வீரமணி மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அவருக்கு முறையான பாதுகாப்பை காவல்துறை வழங்கவில்லை. அவருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கவுள்ளோம்.
கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. எனவே ராகுல் காந்தி போட்டியிடுவதால் நிலைமை மாறிவிடப் போவதில்லை.
தமிழகத்தில் பாஜக - மதச்சாற்பற்ற கூட்டணிக்கு இடையே போட்டி நிலவுகிறது. அங்கு பாஜக வலுவாக இல்லை. அதனால் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் ஒரு அம்சமாக ராகுல் அங்கு போட்டியிடுகிறார். இதனால் பெரிய பின்னடைவு ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.