சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
ராகுல் பேச்சின் முக்கிய அம்சங்கள்:
- இந்தியா முழுவதும் ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற நிலையை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. ஆனால், அனைத்து மொழிகளையும், அனைத்து கலாச்சாரங்களையும் இணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை வழி நடத்துவதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை.
- தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் இருந்து இயக்கபட வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழ்நாட்டின் முடிவுகளை பிரதமர் அலுவலகம் எடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம்.
- தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும். ஆகவே தான் சொல்கிறேன், அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை.
- தன்னுடைய தந்தைக்கு தமிழக அரசால் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று மு.க. ஸ்டாலின் வருத்தப்பட்டார் . அது அவருக்கு ஏற்பட்ட அவமானம் என்பதை விட தமிழகத்தில் குரலாக இருந்த உலகம் போற்றும் தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்ட அவமானம். ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இழைக்கப்பட்ட அவமானம் அது.
- பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். மத்திய அரசு அலுவலகப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்கள் மூன்றாண்டுகளுக்கு அனுமதி பெறத் தேவையில்லை. தொழிலை நிலை நிறுத்திய பிறகு அனுமதி பெற்றாலே போதும்.
- 5 ஆண்டுகளாக 22 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்த பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக 10 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப நாங்கள் உறுதியாக உள்ளோம்.
- தமிழகம் வளர்ச்சி அடைய நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவின் வரலாற்றை முழுமையாக உணராத மோடியை தோற்கடித்து மக்கள் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.