17ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை மட்டும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி நேற்று குடியரசுத் தலைவர் ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது.
முன்னதாக திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு, பள்ளி, கல்லூரிகளில் கடந்த மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.11.63 கோடி பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தல் நடத்தக்கோரி இன்று காலை மனு தாக்கல் செய்தார்.
இன்று காலை 11 மணிக்கு இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதிகள் ஏற்று கொண்டனர். இதில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தரப்பு வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர், ’இது போன்று தேர்தல் ரத்து செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதனால் தவறிழைத்த வேட்பாளர் மற்றும் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வாதத்தை முன்வைத்தார். இதில் தேர்தல் ஆணையம் சார்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டதையடுத்து, தீர்ப்பை நீதிபதிகள் மாலைக்கு ஒத்திவைத்தனர்.
இதனையடுத்து மீண்டும் இந்த வழக்கு மாலை 4.30 மணியிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்றும், குடியரசுத் தலைவரின் தீர்ப்பு செல்லும் என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.