மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி, அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதனை எதிர்க்கும் வகையில் மர்ம நபர் ஒருவர் அவரின் வீட்டிற்கு தொலைபேசி செய்து மிரட்டும் ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைபேசியை அவரது வீட்டின் பணிப்பெண் எடுத்த நிலையில், அதில் பேசும் மர்மநபர் குறிப்பிட்ட ஒரு சாதியின் பெயரைச் சொல்லி, 'நடிகர் கார்த்திக் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு வரக்கூடாது என சொல்லி வையுங்கள், மீறி வந்தால் அவர் உயிருடன் திரும்பிச் செல்ல முடியாது. இதனை தொடர்புள்ளவர்களிடம் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள்' எனக் கூறி எச்சரித்துள்ளார்.