சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் என்ற கிராமம்தான் பச்சமுத்துவின் (பாரிவேந்தர்) சொந்த ஊர். தந்தையார் பெயர் ராமசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து என்பதை சுருக்கி டி.ஆர்.பச்சமுத்து ஆனார். சிறுவயதிலேயே சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆத்தூரில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்சி கணிதப் படிப்பை முடித்தார். பின்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில், முதுநிலை கணிதத்தை நிறைவு செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, டுட்டோரியல் கல்லூரிகளில் கணிதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். அரசு தமிழகத்தில் கல்லூரிகள் நடத்தும் பொறுப்பை தனியார்களிடம் ஒப்படைத்தது. பச்சமுத்துவுக்கு ஏற்றம் தொடங்கியது இந்தக் காலகட்டத்தில்தான். தனது தந்தையின் நினைவாக 1985-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் கல்லூரியைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிதாக கல்லூரிகளை உருவாக்கிக் கொண்டே சென்றது. சைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்பு பாரிவேந்தராக மாறத் தொடங்கினார். கல்வி நிறுவனங்களோடு ஊடகத் துறையிலும் கால்பதித்தவர், ஐ.ஜே.கே என்ற கட்சியையும் தொடங்கினார். 2014ல் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 567457 வாக்குகள் பெற்று தனக்கு பின்வந்த அதிமுக வேட்பாளர் சிவபதியை, 3,34,239 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.