மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, தேர்தல் பறக்கும் படையினர் ஒரு கோடியே 24 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, நல்லம்பள்ளி பகுதியில் பறக்கும் படை அலுவலர் அழகுசுந்தரம் தலைமையிலான குழுவினர் வாகனங்களை சோதனையிட்டு வந்தபோது தொப்பூர் சுங்கச்சாவடி அருகே இருந்து மாருதி ஆம்னி வேனில் பெரியசாமி, சுந்தரமூர்த்தி, லட்சுமணன் ஆகிய மூவரும் ஒரு கோடியே 24 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக எடுத்து வந்தனர்.
இதனை கண்டறிந்த பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து வந்ததால், அதனை பறிமுதல் செய்து தருமபுரி வட்டாட்சியர் ராதாகிருஷ்ணனிடம் இப்பணத்தை ஒப்படைத்தனர். இதுவரையில் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் பறக்கும் படையினர் 11 கோடியே 51 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.