- பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் வெற்றி வாய்ப்புகள் குறைய வாய்ப்பு உள்ளதா?
தேர்தல் முடிவுகள் வரட்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டு இப்போதுதான் களத்தில் உள்ளோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அலை வீசுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு உள்ளோம். ஜெயலலிதாவின் திட்டங்கள் மக்களிடம் சென்று அடைந்து அதற்கு நன்றி அளிக்கும் வகையில் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோன்று பாஜகவுக்கு ஒரு கொள்கை உள்ளது, எங்களுக்கு ஒரு கொள்கை உள்ளது. கொள்கையைப் பொறுத்தவரை அவர்கள் கொள்கையும், எங்கள் கொள்கையும் நிச்சயமாக உடன்பாடு இருக்காது. அடிப்படையில் தமிழ்நாடின் உரிமைக்காக எப்பொழுதும் போராடுவோம் அதுதான் எங்களுடைய நிலை. திமுக தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுத்து டெல்லிக்கு கூஜா தூக்கினார்கள் அவர்கள் போல் நாங்கள் கூஜா தூக்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். அதனால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
- நீட் மற்றும் காவிரி பிரச்னைகளை கடந்த காலங்களில் தீர்க்காமல், இந்த தேர்தலில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்த வருவது எதனடிப்படையில் கூறுகிறீர்கள் ?
நீட் தேர்வை திமுகதான் கொண்டுவந்தது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. காவிரி விஷயத்திலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுதான் அணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் முடிவெடுக்கிறது. இதில் கர்நாடகா அரசோ மத்திய அரசோ முடிவு எடுக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எங்கள் உரிமையை நாங்கள் பெறுவோம் திமுக போன்று மண்டியிட மாட்டோம்.
- சட்டப்பேரவை இடைத்தேர்தலில் உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பிரகாசமாக இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் இப்போது நன்றாக உணர்ந்து உள்ளார்கள். திமுக-காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இலங்கை பிரச்னையில், உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றி, அடுத்த சில நிமிடங்களில், ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதெல்லாம் தமிழர்கள் மறந்து விடமாட்டார்கள். அதனால்தான் ஜெயலலிதா இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தார். அதிலிருந்து ஒரு படி மேலே சென்று நாங்கள் காங்கிரசும், திமுகவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதேபோன்று நியூட்ரினோ திட்டம் ,கதிராமங்கலம், மீத்தேன் என அனைத்தையும் தாரைவார்த்தது திமுகதான். தமிழகத்தில் நிலவிய கட்டை பஞ்சாயத்தால், ஏழை மக்கள் ஒரு செண்ட் நிலம்கூட வாங்க முடியாத நிலை இருந்தது. அதை உடைத்து எறிந்தது அதிமுக அரசு. ஆட்சியில் இல்லாத சூழ்நிலையிலேயே திமுக பல்வேறு குளறுபடிகளை செய்கிறது என்றால் ஆட்சியில் வந்தால் என்ன நடக்கும் என்று தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும். இதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால் மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் .
- ஒருவேளை தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமா?
ஆட்சி மாற்றம் என்பதே இல்லை பாஜக தலைமையில்தான் ஆட்சி நடக்கும். பிரதமராக மோடிதான் இருப்பார். அதனால் தமிழ்நாட்டுக்கு இன்னும் பல நன்மைகள் கேட்டுப் பெறுவோம். நிச்சயமாக இந்தக் கேள்விக்கே இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.