நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டதே அக்கட்சியின் இந்த அபார வெற்றிக்கு ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மற்றொருபுறம் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என அதிமுக பரப்புரை மேற்கொண்டதும் திமுகவிற்கு சாதமாக அமைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியை மட்டுமே அதிமுக கூட்டணியால் கைப்பற்ற முடிந்துள்ளது. அந்த கூட்டணியில் இடம்பெற்று, ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவும், 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் மூன்று சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கும் தேமுதிக, தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்கவும் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கிய ஆறே ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை வழங்கி கவுரவித்த தமிழ்நாடு மக்களையும், அதற்காக உழைத்த கட்சியின் தொண்டர்கள் இடையேயும் பிரேமலதாவின் கூட்டணி பேரங்கள் அறுவறுப்பை ஏற்படுத்தியதே அக்கட்சியின் இந்த நிலைமைக்கு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.