தருமபுரி மக்களவைத் தொகுதியில் இன்று எட்டு வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்றுவருகின்றது. வாக்குச்சாவடி மையத்தை பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தருமபுரி மக்களவைத் தொகுதியில் எட்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.
திமுக வேட்பாளர் புகார் அளித்ததன் பேரிலேயே இந்த மறுவாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே மறுவாக்குப்பதிவு. இந்த எட்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் மக்கள் அனைவரும் பாமகவுக்கு ழுழு ஆதரவை வழங்கியவர்கள்.
பாமக அத்தனை தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெறும். திமுக தோல்விக்கு காரணம் தேடத்தான் எங்கள் மீது புகார் அளித்து மறுவாக்குப்பதிவு நடைபெறச் செய்துள்ளது. அதிமுக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றிபெறுவார்கள், நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். மக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவை அளித்துவருகின்றனர். இந்த அதிமுக ஆட்சி தொடரும், மத்தியில் மோடி ஆட்சி செய்வார்' என நம்பிக்கை தெரிவித்தார்.