ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுடன், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பூந்தமல்லி தொகுதியில் அதிமுக சார்பில் வைத்தியநாதன் போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற பல்வேறு விதங்களில் மக்களைக் கவர்ந்துவருகிறது அதிமுக.
அதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி தொகுதிக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கை ஒன்றை தயார் செய்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த பிரத்யேக அறிக்கையில் கூறியுள்ளதாவது:
- அனைத்து ஊராட்சிகளில் பொது சுகாதார வளாகங்கள் அமைக்கப்படும்.
- ஒருங்கிணைந்த பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- அரசு கலை கல்லூரி ஒன்று நிச்சயம் அமைத்து பூந்தமல்லி பகுதி மாணவர்களுக்கு அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி மையம் அமைத்துத் தரப்படும்.
- திருமழிசைத் தொழிற்பேட்டையை மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
- பூந்தமல்லி தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி நீர் மேலாண்மை செய்யப்படும்.
- விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், உபகரணங்கள் அளிக்கப்படும்.
- கடனுதவி, சொட்டு நீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு, வீடுமனை பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
- போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் அமைத்துத் தரப்படும்
என்பன உள்ளிட்ட 30 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், என் மண்- என் மக்கள் என்னும் முழக்கத்துடன் இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், முகநூல், வாட்ஸ்அப், சுட்டுரைர் ஆகிய சமூக வலைதளங்களில் வேட்பாளருடன் மக்கள் தொடர்புகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், புதிய செயலி ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, பூந்தமல்லி வேட்பாளரிடம் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய தொலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.