இது குறித்து சித்தராமையா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவில் 'ஆபரேஷன் கமலா' மூலம் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்திலும், பிகாரிலும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது என குறிப்பிட்ட அவர், அங்குள்ள 120 தொகுதிகளில் 102 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது என்றார். இம்முறை அந்த அளவுக்கு வெற்றி பெறுமா? பிறகு எப்படி பாஜக ஆட்சி அமையும்? எனக் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசு நிலையாக உள்ளது. பாஜகதான் பொய்யான கருத்துகளை பரப்பிவருகிறது என விமர்சித்த அவர், எங்கள் அரசுக்கு 117 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றார்.
'ஆபரேஷன் கமலா' என்றால் என்ன?
2008ஆம் ஆண்டு கர்நாடகாவில் தங்கள் கட்சி பெரும்பான்மை இல்லாதபோது ஆட்சியை தொடர்வதற்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்ததே 'ஆபரேஷன் கமலா' என கூறப்படுகிறது.