மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு மும்பையின் மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது பிணையில் இருக்கும் சாத்வி பிரக்யா, திக் விஜய் சிங்குக்கு எதிராக போட்டியிடுவார் என பாஜக அறிவித்தது.
குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவரை தேர்தலில் நிறுத்திய பாஜகவை எதிர்த்து பல தரப்பினர் விமர்சனங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவரும் பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதியை இடித்ததாகவும், மேலும் அங்கு கோயிலை கட்ட உதவுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருந்தும் இவர் இப்படி கூறியிருப்பதால் பலர் இதனை விமர்சித்துவருகின்றனர்.