மக்களவைத் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கையை ராஷ்டிரிய ஜனதாதளம் அறிவித்துள்ளது. அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் தற்போதுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இடஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 22.5 விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர உயா்வகுப்பை சோ்ந்த ஏழை மக்களுக்கு 10விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்க பாஜக அரசு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சட்டம் நிறைவேற்றியது. மொத்தமாக, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 59.5 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
தற்போதுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 80 விழுக்காடு மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், மண்டல் பரிந்துரை முழுவதுமாக நிறைவேற்றப்படும் எனவும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் எனவும் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
மக்கள் வேலைவாய்ப்புக்காக பெருமளவில் பிகாரிலிருந்து வெளியேறுவதை குறைக்க மாநிலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.