இந்தியா நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக பல காலமாக உத்தரப் பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவில் இருந்து தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை பெரும்பாலான பிரதமர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். சமகால அரசியலை வைத்து பார்த்தால் உத்தரப் பிரதேசம் ஒரு மினி இந்தியாவை நம் கண் முன் பிரதிநிதித்துவம் படுத்துகிறது. ஏனெனில் பல கட்சிகள் பல சமூகங்களை பிரதிநிதித்துவ படுத்தினாலும் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு கட்சிக்கு மிகப் பெரிய பெரும்பான்மை கிடைத்து இந்தியாவின் அரசியலை மாற்றி போட்டது.
2014 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 31 விழுக்காடு வாக்கு மட்டுமே பாஜகவுக்கு பதிவானது. ஆனால் அக்கட்சிக்கு எதிராக 69 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இருந்தும் பாஜக ஆட்சியை பிடித்தது. இதுபோலதான் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 41 வாக்கு விழுக்காடு மட்டுமே பதிவாகி இருந்தாலும் 71 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் தொடங்கி ஜனதா கட்சி, தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, பாரதிய ஜனதா கட்சி என பல கட்சிகளும், பல கூட்டணிகளும் ஆட்சி புரிந்ததோ, அதேபோல் உத்தரப் பிரதேசத்திலும் காங்கிரஸ், ஜனதா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா என பல கட்சிகள் தனிபெரும்பான்மையுடனும், கூட்டணி அமைத்தும் ஆட்சி புரிந்துள்ளது.
இப்படி மினி இந்தியாவாய் திகழும் உத்தரப் பிரதேசம் இந்த முறையும் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. 1980க்கு பிற்பகுதிகளில் அத்வானி தலைமையில் ரத யாத்திரை இந்தியா முழுவதும் நடந்தது. இதன் எதிரோலியாக பாஜக முதன்முதலாக 1991ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மை தொகுதிகளை பெற்று ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகு 2017ஆம் ஆண்டுதான் தனிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க முடிந்தது. இடைப்பட்ட காலத்தில் கூட்டணியாக ஆட்சியில் இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் உத்தரப் பிரதேசத்தின் முக்கிய கட்சிகளாக உருவாக தொடங்கியது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களாக கருதப்படும் பிரிவு மக்கள், இந்த காலக்கட்டத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற்றார்கள். மாறிமாறி ஆட்சியல் இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், 2014 ஆண்டு பாஜக வலுப்பெற்ற பிறகு சமகால அரசியல் சூழ்நிலை புரிந்துகொண்டு இப்போது கூட்டணி வைத்து பாஜகவை எதிர்க்கின்றார்கள். இந்த மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவினாலும் கடும் போட்டி பாஜகவுக்கும், சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும்தான் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் கட்சி தன் பலவீனங்களை புரிந்து கொண்டு பல தொகுதிகளில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியை மறைமுகமாக ஆதரிப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
2014 ஆம் பாஜக ஆட்சி அமைப்பதற்கு மிக முக்கிய மாநிலமாக இருந்தது உத்தரப் பிரதேசம். 16வது மக்களவையில் பாஜகவின் நான்கில் ஒரு மக்களவை உறுப்பினர்கள் இந்த மாநிலத்தில் இருந்து வந்தார்கள். இப்படிப்பட்ட மாநிலத்தில் தற்போது பாஜக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நிலவும் புரிந்துணர்வே ஆகும். முலாயமை எதிரியாக கருதி வந்த மாயாவதி, தற்போது அவரின் சொந்த தொகுதிக்கு சென்று அவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உண்மையான தலைவர் என கூறினார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் மறைமுகமாக பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்மொழிந்தார்.
கிட்டத்தட்ட 20 விழுக்காடு இஸ்லாமியர்கள் வாழும் உத்தரப்பிரசதேத்தில் ஆளும் கட்சியான பாஜகவில் ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் இல்லாதது அந்த கட்சிக்கு எதிராக செல்லும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். யாதவர்கள், ஜாடவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சமூக மக்கள் 47 தொகுதிகளில் 50 விழுக்காட்டிற்கு மேலாக இருக்கின்றார்கள். இந்த 47 தொகுதிகள்தான் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை தரப்போவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இந்த மூன்று சமூக மக்கள் இதுவரை நடந்தத் தேர்தல்களில் பெரும்பான்மையாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கே வாக்களித்து உள்ளனர். பல தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளும் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி பல தொகுதிகளில் வெல்லும் எனவே தெரிவிக்கிறது.
நாட்டின் 27 விழுக்காடு மதக்கலவரங்கள் இந்த மாநிலத்தில்தான் நடைபெற்றுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணியாக உள்ளது அமைதி என உலக வங்கி தெரிவிக்கிறது. இப்படி இருக்கையில் அமைதியான மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கவே அம்மாநில மக்கள் விரும்புகின்றனர். மே.23 ஆம் தேதி அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள் வளர்ச்சி பாதைக்கு உத்தரப் பிரதேசம் செல்லுமா என்னும் கேள்விக்கு விடை அளிக்கப் போகிறது.